பாட்டாளி மக்கள் கட்சியின் (செயல்) தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆகஸ்ட் 9-ந் தேதி கூட்டியுள்ள பாமக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் (Ramadoss Vs Anbumani) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கினார் அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதனையடுத்து பாமகவின் நிறுவனர்- தலைவர் தாமே என அறிவித்ததுடன், அன்புமணி, பாமகவின் செயல் தலைவர் மட்டுமே என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் ராமதாஸ். இதனை அன்புமணி ஏற்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் படி தமது தலைவர் பதவிக் காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்பது அன்புமணியின் வாதம்.
இதனால் பாமக இரண்டாக பிளவுபட்டுள்ளது. பாமகவில் அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகள் பலரும் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் ராமதாஸ். அதே நேரத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகள், பதவிகளில் தொடருவர் என்கிறார் அன்புமணி.
இந்த நிலையில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு போட்டியாக பாமகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அன்புமணி அறிவித்தார்.
அன்புமணியின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், பாமகவின் தலைவராக தம்மை தாமே அறிவித்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி. அவரது தலைவர் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. பாமகவின் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரமும் பொறுப்பும் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. ஆகையால் அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.