பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் காரணமாக ஒவ்வொரு நாளும் கட்சிக்குள் பல்வேறு திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.
இருவருக்குள் ஏற்பட்ட பூசலுக்கிடையே தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்து வருகிறார் ராமதாஸ். பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்க ஸ்ரீகாந்தி, கடந்த 2ஆம் தேதி தைலாபுரம் ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளார்கள் கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொண்டார். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து நமது மின்னம்பலம்.காம் தளத்தில் ராமதாஸ் தேர்தல் வியூகம்… சுற்றுப் பயணத்துக்கு தயாராகும் மகள் ஸ்ரீகாந்தி- பாமக மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த கூட்டத்தில் ஸ்ரீகாந்தியை கண்டதும் அங்கிருந்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அன்போடு ’அம்மா, அம்மா’ என அழைத்தனர். பின்னர் கூட்டம் முடிந்ததும் அனைவரும் காந்தியுடன் புகைப்படம் எடுத்தனர். மேலும் தனித்தனியாக புகைப்படம் எடுத்த ஒவ்வொருவரும், அவரை தங்கள் தொகுதிக்கும் வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர் என குறிப்பிட்டிருந்தோம்.
அப்போது காந்தியை தனது மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாராக அழைத்திருந்தார் ம.க.ஸ்டாலின்.
அதன்படி கடந்தாண்டு கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதுதான் கட்சியினர் அழைப்பின் பேரில் ஸ்ரீகாந்தி பங்குபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் முக்கியத்துவம் பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார் ம.க.ஸ்டாலின்.
இதற்கிடையே நேற்று காலை அவரை சணல் குண்டு வீசி கொல்ல முயற்சி நடைபெற்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், தாக்குதல் நடத்தி தப்பியோடிய மர்ம கும்பலை கைது செய்ய கோரியும் பாமகவினரும்-வன்னியர் சங்கத்தினரும் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அதோடு 10க்கும் மேற்பட்ட லாரி டயர்களை கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டம் கலைக்கப்பட்டது. எனினும் அப்பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது.
கொலை முயற்சி தாக்குதலை தொடர்ந்து நேற்று இரவு முதல் ம.க.ஸ்டாலின் பாமக மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் ஸ்ரீகாந்தி பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெறுமா என கட்சியினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ”திட்மிட்டப்படி நாளை (06.09.2025) மாலை 4 மணிக்கு மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும்” என ம.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது முடிவில் மாற்றம் செய்து நிகழ்ச்சி ரத்து செய்து விடுவோம் என மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளாராம் ம.க.ஸ்டாலின்.
கட்சியினர் அழைப்பின் பேரில் ஸ்ரீகாந்தி பங்குபெறும் முதல் நிகழ்ச்சியாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.