அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே பாமக யாருக்கு சொந்தம் என்று போட்டி நிலவி வருகிறது.
இதில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி பனையூரில் உள்ள அவரது தரப்பு அலுவலகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்தும், அந்த நோட்டீஸை ரத்து செய்து தங்கள் தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “அன்புமணியின் பதவி காலம் கடந்த ஆண்டு மே மாதமே முடிவடைந்து விட்டது. ஆனால் தான்தான் பாமக தலைவர் என்று போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, சின்னத்தை பெற்றுள்ளார்.
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கக் கூடாது. தன்னையே அணுகி இருக்க வேண்டும்.
எனவே அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து மீண்டும் என் முகவரிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு இன்று (பிப்ரவரி 2) தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது அன்புமணி தரப்பு வாதாட முயன்றது.
அதாவது பாமக தலைவர் நான்தான். என் தந்தையின் பின்னால் இருப்பவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள். அவருக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே அவர்களால் கட்சியின் பெயரில் வழக்கு தொடர முடியாது. ராமதாஸ் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று அன்புமணி தரப்பு தெரிவித்த போது,
இதை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.
ராமதாஸ் தாக்கல் செய்த ரிட் மனுவில் தனது மகனான அன்புமணியை ஒரு பிரதிவாதியாக சேர்க்கவில்லை. எனவே அவரது வாதங்களை தற்போது கேட்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அவர் வாதியாக சேர விரும்பினால் உரிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
