அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம். அவர்கள் தெருக்கூத்து நடத்துகிறார்கள். பஃபூன் உட்பட ஒவ்வொரு வேடமாக வரும். காத்திருந்து பாருங்கள் என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி சென்ற பாமக கெளரவத் தலைவரான ஜி.கே மணி, ராமதாஸ் தலைமைதான் உண்மையான பாமக என தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து அது தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கினார்.
மேலும் அன்புமணியின் தலைவர் பதவி ஓராண்டு நீட்டிப்பு என்று அனைத்தும் பொய்யான தகவல் என்றும், பாமக அலுவலகம் மாற்றப்பட்டதில் அன்புமணி தரப்பு முறைகேடு செய்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து பாமக சட்டமன்றத் குழுத் தலைவரான ஜி.கே மணி மற்றும் சட்டமன்ற கொறடா அருள் ஆகியோரை அவர்களில் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்களான வெங்கடேஷ்வரன், சிவக்குமார், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டமன்ற செயலாளரிடம் இன்று மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று மாலை செய்தியாளார்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “பாமகவில் இரு தரப்பு என்பது இல்லை, அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம். அவர்கள் தெருக்கூத்து நடத்துகிறார்கள். பஃபூன் உட்பட ஒவ்வொரு வேடமாக வரும். காத்திருந்து பாருங்கள்.
இருதரப்பு பிரச்னை தேர்தல் வரை போகாது. அதற்குள் சரி செய்யப்படும். கட்சியினர் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். கூட்டணி தொடர்பாக நான்தான் முடிவெடுப்பேன்” என ராமதாஸ் பேசினார்.