தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்கள் பின்னணி பாடுவதோ, இசையமைப்பதோ, கதாசிரியராக அல்லது இயக்குனராக ஆவதோ புதிதல்ல. குறிப்பிட்ட திரைப்படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டவும், தமது திறமைகளை வெளிப்படுத்தவும் இது போன்ற முயற்சிகளில் இறங்குவதுண்டு.
அந்த வகையில், ‘மயக்கம் என்ன’ படத்தில் வரும் ‘பிறை தேடும் இரவிலே’ வழியே பாடலாசிரியர் ஆனவர் தனுஷ். டைட்டிலில் அதனை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ’Poet-u’ என்று குறிப்பிட்டார். ’தேன்மொழி பூங்கொடி’, ’வெண்பனி மலரே’ என்று குறிப்பிடத்தக்க பாடல்கள் அவரிடத்தில் இருந்து ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ram pothineni became a poet as dhanush and sk
அவரது வழியைப் பின்பற்றி, பின்னர் சிவகார்த்திகேயனும் சில பாடல்களை எழுதினார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் வந்த ‘அரபிக்குத்து’ அதிலொன்று.
இந்த வரிசையில் கமல்ஹாசனையும் சிலம்பரசனையும் சேர்க்காமல் போனால் கோபித்துக் கொள்வார்கள்.
குறிப்பிட்ட பாடல்களை இசையமைப்பாளரோ, நாயகர்களோ பாடினால் ‘படுபயங்கர ஹிட்’ ஆவது போன்றே, அவர்கள் எழுதுகிற பாடல்களும் ரசிகர்களிடம் ‘கிறக்கத்தை’ ஏற்படுத்தி வருகின்றன. எளிதாக விளம்பரப்படுத்துகிற உத்தியாகவும் அது இருக்கிறது.
’இந்த விஷயத்தை நம்ம பயன்படுத்தி பார்த்தால் என்ன’ என்று தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி சிந்தித்திருக்க வேண்டும். விளைவு, அவர் நடித்து வருகிற ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் ’நுவ்வுண்டே சாலே’ எனும் பாடலை எழுதி ’Poet-u’ ஆகியிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் ’பாடலாசிரியர் ஆன ஹீரோக்கள்’ வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறார்.
அனிருத் பாடியிருக்கும் இந்தப் பாடல் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி, ‘ட்ரெண்டிங்’கில் நம்பர் 1 ஆகியிருக்கிறது.
மகேஷ்பாபு.பி இயக்கியிருக்கிற இந்த படத்தின் வழியே தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகின்றனர் விவேக் & மெர்வின். ’ஆரம்பமே அமர்க்களம்’ என்பது போல, இவர்களது சிங்கிளுக்கு ‘செமயான’ வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் ராம் ஜோடியாக நடித்திருப்பவர் பாக்யஸ்ரீ போர்சே. இவரும் கூட ‘ஜென்ஸீ’ தலைமுறைக்குத் தெரிந்த ஒரு விஐபி புள்ளி தான்.
இப்படிப் பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து, ராமின் ’Poet-u’ அந்தஸ்தை தாங்கிப் பிடித்திருக்கின்றன.
இப்படி ஒரு அறிமுகம் கிடைப்பது எளிது தான்; ஆனால், அதனைத் தக்க வைக்கத்தான் நிறையவே போராட வேண்டியிருக்கும்..!