தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் இடம் தரப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காததால் குழப்பம் நீடிக்கிறது. Rajya Sabha Seat for DMDK?
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை எம்பி இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடத்தை தேமுதிக தொடர்ந்து கேட்டு வருகிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என்பது தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.
இதனிடையே சென்னையில் நேற்று எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சுதீஷ் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று, மறைந்த தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது சாகிப் வீட்டுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். அப்போதும் செய்தியாளர்கள், தேமுதிகவுக்கான மாநிலங்களவை எம்பி இடம் ஒதுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலையும் தெரிவிக்காமல் சென்றதால் குழப்பம் நீடிக்கிறது.