தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில் திமுக 4 மாநிலங்களவை எம்.பி.க்களையும் அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்ந்தெடுக்க முடியும்.
இதனடிப்படையில் திமுக தமக்கான 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களில் தேமுதிகவுக்கு 1 இடமும் காங்கிரஸுக்கு 1 இடமும் கொடுத்துள்ளது. திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ராஜ்யசபா எம்.பி. பதவியைப் பெற முயற்சித்த நிலையில் தமிழகத்தில் அதிக அறிமுகம் இல்லாத கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிறிஸ்டோபர் திலக். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக உள்ளார். வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களின் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கிறார்.
