நாடு முழுவதும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1,280 பேருந்துகள் முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் – திருவண்ணாமலை இடையே சிறப்பு சேவை இயக்கப்படுகிறது.
கோவை ஈஷாவில் ராஜ்நாத் சிங்
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈஷா மைய சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் இவ்விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
மேலும் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நேரலையாக இந்த விழா ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கோவை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். கோவை மாவட்டம் முழுவதும் 7,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
