ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஆகஸ்ட் – 2) கூலி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் தன் வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்து பேசினார். “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே..” என வழக்கம் போல் தனது பேச்சை தொடங்கினார் ரஜினிகாந்த்.
சத்யராஜூடன் முரண்
மேலும், சத்யராஜ் உடன் 38 ஆண்டுகளுக்கு பின் பணியாற்றி உள்ளேன். எனக்கு சத்யராஜ் உடன் கருத்தியல் ரீதியான முரண்பாடு இருக்கலாம். ஆனால் மனதில் பட்டதை சொல்லிவிட்டு போய்விடுவார். மனதில் பட்டதை சொல்பவர்களை நம்பலாம். ஆனால் உள்ளேயே வைத்துக் கொண்டு இருக்கிறவர்களை நம்ப முடியாது என்றார்.
லோகேஷ் கனகராஜை கலாய்த்த ரஜினி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து கூறுகையில், கூலி படத்தில் உண்மையான ஹீரோ வேற யாருமில்லை.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு வானுயர உள்ளது. சக்ஸஸ்ஃபுல்லான கமர்சியல் இயக்குநர் என்னுடன் இணைகிறார். அதுவும் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன்.. இந்த காம்போவே புயலை கிளப்பும்.

சமீபத்தில் லோகேஷ் 2 மணி நேரத்திற்கு ஒரு இன்டர்வியூ கொடுத்து இருந்தார். நான் உட்கார்ந்து பார்த்தேன்.. அது முடியல; பின்னர் படுத்துக்கொண்டே பார்த்தேன் முடியல; பின்னர் தூங்கி எழுந்து பார்த்தேன்; அப்போதும் அது முடியல. ரொம்ப டேலண்ட்… ரொம்ப டேலண்ட்.. என கிண்டலாக தெரிவித்தார். அப்போது அரங்கில் கைதட்டல் எழுந்தது.
எல்லாம் முடிந்துவிடும்..
தொடர்ந்து பேசிய ரஜினி, என்னிடம் 5 வருடங்களாக இண்டர்வியூ கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முடியாது என சொல்லி விட்டேன். கொடுத்தால் எல்லாம் முடிந்தது..என்றார்.
அஜித் பட டயலாக் சொன்ன ரஜினி
நாகார்ஜுனா குறித்து பேசுகையில், இந்த வயதில் என்ன ஒரு கலராக இருக்கிறார். எனக்கு முடி எல்லாம் போய்விட்டது. உங்கள் பிட்னஸ் ரகசியம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் ஒன்றுமே இல்லை சார். உடற்பயிற்சி மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட்டார். அஜித்தின் மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு ஒரு டயலாக் வைத்திருப்பார். ‘நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாகவே நடிக்கிறது’ .. அது போல் நாகார்ஜுனா நெகட்டிவ் ரோலில் மிக அருமையாக நடித்திருக்கிறார் என வெளிப்படையாகப் பாராட்டினார்.

100 கிலோ அரிசி மூட்டை சுமந்த காலம்..
சிறு வயதில் பத்து பைசா கூலிக்காக 100 கிலோ அரிசி மூட்டையைத் தான் சுமந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ரஜினிகாந்த். “நான் கண்டக்டராக இருக்கும்போது என்னுடைய நண்பன் அவனின் தங்க செயினை கொடுத்து நீ சினிமாவில் நடி என்று சொன்னான். அதனால் தான் நான் இங்கே இருக்கிறேன்” என்று தன் நண்பர் ராஜ் பகதூர் குறித்த நினைவுகளைப் பெருமிதத்துடன் பகிர்ந்தார்.
வீட்டில் நிம்மதி இல்லைன்னா..
மேலும் உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உள்ளது. அதுதான் இறைவனின் குரல். இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் புகழ் வந்தாலும் வீட்டில் நிம்மதி இல்லாவிட்டால், வெளியில் கௌரவம் இல்லை என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.