நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை எனது நண்பர்களைச் சந்திப்பேன். சிவாஜி என்ற பெயரை நான் மறந்துவிட்டாலும், அவர்கள் அந்தப் பெயரை அழைத்துக் கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 20) நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினி பேசிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,”கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து நீங்கள் எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆளாக மாறியிருக்கிறார்கள்; பெரிய இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இங்கு படித்திருக்கிறார்கள். என்னுடைய சம்பந்தி வணங்காமுடியும் இங்கு படித்தவர்தான். இதுபோல நிறைய பேர் இங்கு படித்து வந்திருக்கிறார்கள்.
டிஜிபி சைலேந்திரபாபு செய்துள்ள சேவை சாதாரணமானது கிடையாது. தமிழக காவல்துறை எப்போதும் அதை மறக்க முடியாது. துணிச்சலாக அவர் செய்த பணிகள் அசாத்தியமானவை. சைலேந்திரபாபுவின் அந்த பிட்னஸ் எனக்குப் பிடிக்கும். சினிமா ஹீரோ கூட அந்த மாதிரி இருக்க மாட்டார்கள்.
அதேபோல் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் அறிவு ஆழமானது. அவருக்குத் தெரியாத விஷயங்கள் இருக்காது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் சொல்லுவார். அவர் அப்படிப் பேசுவது அசாத்தியமானது என்றும் தெரிவித்தார். தலைமைச் செயலாளராக இருந்தபோது நிறைய பணிகள் செய்திருக்கிறார். அவரைப் போல ஒரு மென்மையான மனிதரைப் பார்த்தது கிடையாது.
பல விதமான உறவுகள் இருந்தாலும், நண்பர்களைப் பார்க்கும்போது புத்துணர்வு இருக்கும். நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும். நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை எனது நண்பர்களைச் சந்திப்பேன். சிவாஜி என்ற பெயரை நான் மறந்துவிட்டாலும், அவர்கள் அந்தப் பெயரை அழைத்துக் கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது புத்துணர்ச்சியாக இருக்கும் என்று ரஜினிகாந்த் வீடியோ மூலம் வாழ்த்தி பேசினார்.
