இளையராஜாவிற்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஜானி படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு அப்படி இருந்த இளைய ராஜா இப்போது இப்படி மாறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை பயணம் 50 ஆண்டுகளை தொட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நேற்று (செப்டம்பர்13) நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பாராட்டு விழாவில் போசிய இளையராஜா, “ரஜினிகாந்த் 2 நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்து நாம் செய்ததை எல்லாம் நான் சொல்லப் போகிறேன் என்று சொன்னார். அப்போது நான் பெல்பாட்டம் பேன்ட் போட்டுக் கொண்டு, தலைமுடியை படித்து வாரிக் கொண்டு இருந்ததிலிருந்து இப்போது எப்படி மாறினேன் என்று சொல்லப் போகிறேன் என்றார். நான், ரஜினி, மகேந்திரன் மூவரும் ஒருநாள் குடித்தோம். அதை குறிப்பிட்டு ‘நீங்கள் குடித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அரை பாட்டில் குடித்து நீங்கள் ஆடிய ஆட்டம் இருக்கு பாருங்க. அதை நான் சொல்லப் போகிறேன்’ என்று கூறினார்” என்று இளையராஜா தெரிவித்தார்.
உடனே மேடையில் இருந்த ரஜினிகாந்த் இளையராஜாவின் அருகில் சென்று மைக்கை பிடித்து பேசினார். அப்போது “விஜிபியில் ‘ஜானி’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் இரவு நானும் மகேந்திரன் சாரும் மது அருந்தினோம். இவரிடம் ‘சுவாமி நீங்க?’ என்று கேட்டோம். இவரும் ‘ம்ம்’ என்றார். ஆனால் அரை பாட்டில் பீர் குடித்துவிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே! அதுமட்டுமின்றி ஊரில் இருக்கும் கிசுகிசு எல்லாம் கேட்கிறார்.
அதுவும் முக்கியமாக ஹீரோயின்கள் பற்றி. அப்படி இருந்தவர் இப்போது இப்படி மாறிவிட்டார்” என மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.