மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்த்துவிட்டு, அவரை போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தும் கும்பலைத் தடுக்கும் ஒரு மனநல நோயாளி என்ற கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதோடு ருக்மணி வசந்துடனான காதலையும், அவரை காப்பாற்ற அவர் எடுக்கும் ஆக்சன் அவதாரத்தையும் அழகாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
மதராஸி திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனையும், அடுத்தடுத்து இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த தனக்கு போன்செய்து வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனிடம், “மை காட், எக்ஸலண்ட்! என்ன பெர்ஃபார்மன்ஸ்! என்ன ஆக்ஷன்ஸ்! சூப்பர் சூப்பர் எஸ்.கே! எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆக்ஷன் ஹீரோ ஆயிட்டீங்க. காட் பிளஸ், காட் பிளஸ்” என்று பாராட்டியதாக சிவகார்த்திகேயன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாராட்டு குறித்து ‘என் கடவுள், என் தலைவர் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து மதராஸி படத்திற்கான பாராட்டைப் பெற்றேன்” என்று மகிழ்ச்சியுடன் அதை தெரிவித்துள்ளார்.