’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு ரஜினியின் அடுத்த பட வசூல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறியிருக்கிறது. அந்த படத்தை இயக்குவது ‘லியோ’ தந்த லோகேஷ் கனகராஜ் எனும்போது அந்த எதிர்பார்ப்பின் உயரம் எப்படியிருக்கும்? பட வெளியீடு நெருங்கும் இச்சமயத்தில் வெளியாகிற ஒவ்வொரு அப்டேட்டும் அதனை மனதில் கொண்டே வெளியாகின்றன. ‘ஓவர் எதிர்பார்ப்பு வேணாமே’ என்று ‘கூலி’ படக்குழு மன்றாடினாலும், ரசிகர்கள் அதனைக் கேட்பதாக இல்லை. rajinikanth coolie power house set benchmark
அதற்கேற்றவாறு, இப்போது அப்படத்தில் இருந்து மூன்றாவது பாடலான ‘பவர் ஹவுஸ்’ நேற்று இரவு வெளியானது. இதன் ‘பாடல் வீடியோ’ சுமார் 1 மணி நேரத்தில் சுமார் 9 லட்சம் பார்வைகளை அள்ளிய நிலையில், தற்போது வரை 40 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
‘அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே..’ என்று இப்பாடலின் தொடக்கமே ரசிகர்கள் குதூகலிப்பதாக உள்ளது. பிறகு ‘குழந்தை சிரிப்பு போல பேஸ் தான்.. இமயமலை போல மாஸ் தான்..’ என்று எளிமையான ‘பஞ்ச்’களை அள்ளி தெளித்து அதனை அதிகப்படுத்தியிருக்கிறார் இப்பாடலை எழுதியுள்ள அறிவு.
அவரது பாடல் வரிகளைச் சட்டென்று ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அனிருத்தே பாடியிருக்கிறார்.
‘பவர் ஹவுஸ்’, அங்கு நடக்கிற வன்முறை, அதற்கான உபகரணங்கள் என்று இந்த பாடல் வீடியோவில் வருகிற காட்சியமைப்பு, இது ‘ஆக்ஷன்’ பின்னணியில் ஒலிப்பது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதையும் மீறி, ரஜினியின் திரையிருப்பும் வசீகரமும் இத்தனை ஆண்டுகளாகக் குறையாததைச் சுட்டிக் காட்டி கொண்டாடும் வகையிலும் இப்பாடல் அமைந்திருப்பதைச் சொல்லியாக வேண்டும்.
அந்த வகையில், ரஜினியை விட வயது அதிகமுள்ள அவரது ரசிகர்கள் முதல் இப்போது நடை பயில்கிற குழந்தைகள் வரை அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடியது இந்த ‘பவர்ஹவுஸ்’.
அவங்களோட கொண்டாட்டத்தை மனசுல வச்சுக்கிட்டு, லோகேஷ் கனகராஜ் & டீம் ‘ஸ்கிரீன்’ல படியுற ரத்தக்கறையோட அளவை குறைச்சா நல்லாயிருக்கும்..!