பராசக்தி படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக கதாநாயகன் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
பராசக்தி திரப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிறது. இரண்டு நாட்களில் ரூ. 51 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 14) பராசக்தி சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், ”தனது 25-வது படம் ஒரு முக்கியமான மற்றும் இன்ஸ்பைரிங்கான கதையாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இயக்குநர் சுதா கொங்கரா சொன்ன இந்தக் கதை அதற்குப் பொருத்தமாக இருந்தது.
இது தமிழ் உணர்வு மற்றும் மொழிக்காக நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் படம் என்பதால் இதில் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.
நடிகனாக என்னை மேம்படுத்திக் கொள்ள எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “படம் ரிலீஸாவதற்கு முதல் நாளே படத்தைப் பார்த்துவிட்டு, “பிரமாதமாக பண்ணியிருக்கீங்க” என்று ஒட்டுமொத்த டீமையும் நடிகர் கமல்ஹாசன் சார் பாராட்டினார். ‘அமரன்’ படத்தை விட இந்தப் படத்தைப் பற்றி கமல் சார் அதிக நேரம் (சுமார் 5 நிமிடங்கள்) பாராட்டி பேசினார்.
அதுபோலவே ரஜினிகாந்த் சார் எனக்கு போன் செய்து, “வெரி போல்டு மூவி, செகண்ட் ஹாப் சூப்பர், ஃபென்டாஸ்டிக் பெர்பார்மன்ஸ்” என்று பாராட்டினார் என உற்சாகத்துடன் கூறினார்.
டாக்டர் படம் முதலே எல்லா படத்துக்கும் என்னை அழைத்து பாராட்டு தெரிவித்து வரும் என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டாருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
