திரைப்படப் பயிற்சிப் பள்ளிக்கு மாணவர்களுடன் கலந்துரையாட வருகிறார் இயக்குனர் கே.பாலச்சந்தர் . சந்திப்பு முடிந்ததும் அந்தப் பள்ளியின் நடிப்புப் பயிற்சியாளர் ஒரு இளைஞனை பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தி “பையன் பெயர் சிவாஜி ராவ். நல்ல திறமைசாலி. எது பண்ணாலும் வித்தியாசமா இருக்கு “என்கிறார் .
நடிப்புப் பயிற்சியாளர் சொன்ன காரணத்தால் அந்த இளைஞன் சிவாஜி ராவைப் பார்க்கிறார் பாலச்சந்தர் . அந்தப் பார்வைதான் இப்போது ஐம்பது வருட ரஜினியிஸத்தில் வந்து நிற்கிறது
அப்படி அறிமுகம் செய்தவர்தான் கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) .
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்பட பயிற்சிப் பள்ளி இயக்குநராகவும் நடிப்புப் பயிற்சியாளராகவும் இருந்து பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே. எஸ். நாராயணசாமி நேற்று காலை 6 மணிக்கு காலமானார்.
புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல் மாணவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார்.
ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இவர் நடிப்பு பயிற்சி வழங்கியுள்ளார் ..
ரஜினிகாந்த் மீது அவருக்கு அளவில்லாத அன்பு இருந்தது. அதன் காரணமாகவே இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் திரைப்படப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
கோபாலி மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருப்பவர் ரஜினி.
கோபாலி மரணடைந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அவர் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்
K. S. கோபாலி , இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் திறம்பட பணியாற்றிய கோபாலி, எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதியுள்ளார்.. அதற்காகவும் இன்னொரு அஞ்சலி
- ராஜ திருமகன்
