இளையராஜா தன் தம்பி, மனைவி, மகள் மறைந்த போது சிந்தாத கண்ணீரை நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கான சிந்தினார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவிற்கு நேற்று (செப்டம்பர் 13) சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு தமிழ்நாடு அரசியலில், இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும் புதிய , பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, “வாங்க.. 2026 தேர்தலில் பார்க்கலாம்”.. என தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜா சிம்பொனியை லண்டனில் வாசிக்க போகிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்லி, நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய பொழுது அவருக்கு மாபெரும் விழா நடத்த வேண்டும் என சொல்லி தற்பொழுது இந்த விழா நடத்திக் கொண்டிருக்கிறது. நமது கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்து இருக்கும் முதலமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிசய மனிதர்களை புராணம், இதிகாசத்தில் படித்திருக்கிறேன். ஆனால் நேரில் கண்ட அதிசய மனிதர் இளையராஜா .
அவரை நான் சுவாமி என்று தான் கூப்பிடுவேன் அவரைப் பற்றி பேசுவது என்றால் நிறைய பேசலாம். இருந்தாலும் நேரத்தின் அருமை கருதி, சில விஷயங்களை சொல்கிறேன். அனைத்து தமிழக மக்களின் ரத்தம் , நாடி , நரம்பில் அவரது இசை ஊறி போயிருக்கிறது.
கூலி படத்தில் பழைய பாடல்கள்
70, 80, 90களில் இசைத்த பாடல்கள் தற்பொழுது திரைக்கு வந்தால் கூட படம் ஹிட்டாகி விடும். கூலி படத்தில் கூட பழைய பாடல்களை பயன்படுத்தி இருப்போம். இளையராஜாவை மாமனிதராக பார்த்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருப்பார்.
50 ஆண்டுகளில் அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். முதன் முதலில் 74ல் ஜி.கே வெங்கடேசனின் அசிஸ்டெண்டாக இருக்கும் போது சின்ன பையனாக இருந்தார். புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் பார்க்கும் போது ஒரு இளைஞனாக.. கிளீன் சேவ் செய்து அவரை பார்த்தேன். பேண்ட் சர்ட் உடன் இருந்த அவர் திடீரென ஒரு நாள் மொட்டை அடித்து கழுத்தில் உத்திராட்ச்ச கொட்டையுடன் பொட்டு வைத்து இருந்தார். அவரை பார்த்த உடன் என்ன சாமி இது என்று கேட்ட போது இதுதான் சாமி ஒரிஜினல் என்றார். அப்பொழுது இருந்து அவரை சுவாமி என்றுதான் கூப்பிட்டு வருகிறேன்.
பஞ்சு அருணாச்சலத்துடன் ஒருமுறை கம்போசிங் சென்றிருந்தேன். ராகங்கள் அவரிடம் இருந்து அப்படி கொட்டுகிறது. ராகதேவி இந்த ராக தேவனுக்கு பாடல்களை தள்ளிக் கொடுக்கின்றாள். இவர் அந்த ஹார்மோனியம் வழியாக அள்ளிக் கொடுக்கிறார்.
ஒருமுறை வாங்க ரஜினி உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார். நான் சென்றபோது, பாவலர் அண்ணன் இறந்துவிட்டார். கங்கை அமரன் செட்டிலாகி விட்டான். பாஸ்கர் கொஞ்சம் செட்டில் பண்ண வேண்டும். அதற்கு ஒரு படம் செய்ய வேண்டும் என சொன்னார்.
அந்த படம் ராஜாதி ராஜா. பாஸ்கர் படத்தைப் பற்றிய பேச மாட்டார் . எனக்கு டென்சனாகி விட்டது.
பஞ்சு அருணாசலம் ஊரில் இல்லை. அப்பொழுது இளையராஜாவிடம் சென்று டென்சனாக இருக்கிறது படம் எப்படி ஓடும் என்று தெரியாது என சொன்ன பொழுது சுவாமி இந்த படம் பற்றி ஒரு லைன் கூட எனக்கு தெரியாது.. இந்த படம் சில்வர் ஜூப்ளி போகவில்லை என்றால் இனிமேல் ஹார்மோனியம் பெட்டியை தொட மாட்டேன்.. பாட மாட்டேன் என சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர் சொல்வதை செய்பவரே என்று பார்த்தேன்.
நான் சொல்லவில்லை சுவாமி.. மூகாம்பிகா சொல்கிறாள்.. அதனால் நான் சொல்கிறேன் என அவர் சொன்னார்.
25 வாரம் டென்ஷனாக இருந்தது. பணத்தைக் கொடுத்தாவது படத்தை சில்வர் ஜூப்ளி ஓட்டிவிட வேண்டும் என மைண்ட் செட் ஆகி இருந்தேன். ஆனால் படம் சில்வர் ஜூப்ளியாக ஓடியது.
என்ன ஒரு நம்பிக்கை. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு.. ஆனால் இந்த மாதிரி நம்பிக்கையா.. முழுமையான சரண்டர்.. அவர் சொன்னால் பலிக்கும்.
கமலஹாசனுக்கு கொஞ்சம் அதிகமா செய்வார்
கமல், விஜயகாந்த், முரளி,மோகன்,ராமராஜன் என அனைவருக்கும் இசையமைத்து கொடுத்தார்.
எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் என்று சொல்வார். ஆனால் கமலஹாசனுக்கு கொஞ்சம் அதிகமாக செய்வார். இதை முதல்வர் முன்பாகவே நான் பதிவு பண்ணுகிறேன்.
தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே என்ற பாட்டை பாடினால் இங்கு இருக்கும் 1000 பேரும் அழுதுடுவீங்க..
இன்னொரு இசையமைப்பாளர் வந்த உடன் எல்லோரும் அங்கு சென்றார்கள் ரஜினிகாந்த் உட்பட, ஆனால் அவர் அதை பற்றி கவலைப்படவில்லை
நண்பனுக்காக கண்ணீர்
திடீரென தம்பி பாஸ்கர் காலமானார்.. அவர் உயிராக நேசித்த மனைவி ஜீவா காலமானார். ஒரே மகள்.. மகள் என்றால் அவ்வளவு அன்பு.. பிரியம்.. சும்மா உட்காந்திருப்பார் மகள் வந்தால் போன கரண்ட் வந்த மாதிரி.. மகள் பவதாரணி காலமானார். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் அவர் ஆர்மோனியம் வாசிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. நமது உலகத்தில் அவர் இல்லை. இசை உலகத்தில் அவர் இருக்கிறார். அப்பப்ப இங்கு வந்து போகிறார்.
பிரசாத் ஸ்டூடியோவில் இடமில்லை என்ன சொன்ன பொழுது அதே ரோட்டில் ஒரு தியேட்டரை வாங்கி தனியாக ஒரு ஸ்டுடியோவை கட்டினார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக் ஆகிய இரண்டு பேரின் இடங்களை யாராலும் நிரப்ப முடியாது. கோவிட் காலத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்த பொழுது யாருக்கும் சிந்தாத அவரது கண்ணீர் நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணிக்காக சிந்தியது.
அதையடுத்து மெட்டா வரிகளா என்று வாக்குவாதம் வந்தது. அப்போது இளையராஜா மீடியாவிற்கு வந்த போது வாக்குவாதம் குறித்து கேள்வி எழுந்தது. அது எல்லாம் எனக்கு தெரியாது. நான் சிம்பொனி எழுதி இருக்கிறேன். இந்த மாதிரி சிம்பொனி யாதும் இதுவரை எழுதியதில்லை என்றார்.
நானே ஸ்கிரீன் ப்ளே எடுத்துக் கொடுக்கிறேன்
இந்த இளையராஜாவை எந்த அளவுகோல் வைத்து அளக்க முடியாது. அதை மீறி நின்றவன் நான் என்று நின்றவர் இளையராஜா என்றார்.
கமலஹாசன் நான்கு வரியில் பாடல் பாடினார் , அந்தப் பாடலும் நான் பேசியதும் ஒன்றுதான். இளையராஜா உங்களுடைய சுயசரிதை படத்தை சீக்கிரம் வெளியிடுங்கள். என்னை விட்டால் நானே ஸ்கிரீன் ப்ளே எடுத்துக் கொடுக்கிறேன்… நன்றி வணக்கம்” என்றார்.