ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு தி.மு.க-வின் மிரட்டல்களே காரணம் என்றும், விஜய்க்கு இருக்கும் “மனவலிமை” அவருக்கு இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா ஒப்பிட்டுப் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆருக்குப் பிறகு பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த் என்றும், தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என விரும்பியதாகவும் குறிப்பிட்டார். ஆனால், திமுக குடும்பத்தினர் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை விடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டதாகவும், இறுதியில் அவர் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.இது ரஜினிகாந்த் மீதான விமர்சனம் இல்லை என்று கூறிய அவர், அத்தகைய மன வலிமை தவெக தலைவர் விஜய்யிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். கரூர் சம்பவத்துக்குப் பிறகும் வெளியில் வந்து செயல்படுவதாகவும், தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் வீட்டில் அமைதியாக உட்காரவில்லை என்றும் ரஜினியுடன் விஜய்யை ஒப்பிட்டு பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே… கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்…
பிழைக்கவும் ரஜினி..பழிக்கவும் ரஜினி” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
