சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே என்ற மாணவி இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் எழுத்து தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதமும், 2026 பிப்ரவரி வரை நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.
இதன் முடிவு இன்று (மார்ச் 6) வெளியான நிலையில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே இந்தியளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ராஜேஸ்வரியின் தாய் பேராசிரியராகவும், தந்தை இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் கடை நடத்திக்கொண்டு, இன்சூரன்ஸ் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகிறார். இவர்களது மகளான ராஜேஸ்வரி சுவே, 2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
அதைத்தொடர்ந்து சிவில் சர்வீஸ் பணிக்கு தயாரான ராஜேஸ்வரி சுவே 2024 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
எனினும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த ராஜேஸ்வரி சுவே, இதுவரை 5 முறை இத்தேர்வை எழுதியுள்ளார். தற்போது 2026 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ராஜேஸ்வரி சுவே பயிற்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த பயணத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது நான் முதல்வன் திட்டம்தான். 2024ல் அப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்று துணை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த அனுபவமும் எனக்கு உதவியாக இருந்தது.
நான் முதல்வன் திட்டத்தில் கொடுக்கும் நிதி மற்றும் நிர்வாக ரீதியான உதவி என்னை சரியான பாதையில் அழைத்துச் சென்றது. முதல்நிலை தேர்வுக்கே மாதம் மாதம் 7500 ரூபாய் கொடுக்கிறார்கள். இது பெற்றோர்களை சாராமல் மாணவர்கள் சுயமாக படிப்பதற்கு நம்பிக்கை தருகிறது.
முதன்மை தேர்வுக்கு இலவசமாக தங்கி படிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
நான் டெல்லிக்கு நேர்காணலுக்கு சென்ற போது மற்ற மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள், குடிமை பணி தேர்வுக்கு படிப்பதற்கு இவ்வளவு பணம் கொடுக்கிறார்களா என்று அச்சரியப்பட்டனர்” என்று கூறினார்.
