மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவுக்கு செல்லலாம், ஊர் சுற்றத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
முன்னதாக, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் 07 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட மறுநாளே (08 மே 2021) திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், தற்போது அதிமுக அடுத்து ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த வாக்குறுதி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நூதன விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சிவகாசியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “மகளிருக்கு மட்டும் இலவச பயணத்தை அறிவித்து, ஒன்றாக இருந்த குடும்பத்தை திமுக அரசு பிரித்துவிட்டது. மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவுக்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
