“என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது, அமைச்சர் ஆக்கியது, எல்லாம் இந்த சிவகாசி தொகுதி தான். இங்கேதான் நான் போட்டியிடுவேன்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். rajendra balaji cry and confirm his seat in sivakasi
சிவகாசியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமியின் பிரசார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர்.

என்னை மிரட்டி பணிய வைக்க திமுக முயல்கிறது. என் மீது பொய் வழக்கு போட்டு திமுக ஆட்சியில் கைது செய்தனர். சிவகாசியில் தான் நிற்பேன். சிவகாசி எனது மண். என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது, அமைச்சர் ஆக்கியது, எல்லாம் இந்த சிவகாசி தொகுதி தான்.
இங்கேதான் நான் போட்டியிடுவேன். யார் தடுத்தாலும் உங்கள் ஆதரவோடு வெற்றி பெறுவேன்” என கண்ணீர் மல்க பேசினார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் கைதட்டி உற்சாக மூட்டினர்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று 3 கோடியே 10 லட்சத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.
18 நாட்கள் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியைக் கர்நாடகாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.