நடிகர் அஜித்துக்கு விஜய்யை விட 2 மடங்கு கூட்டம் வரும். விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மை என்றால் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜேந்திர பாலாஜி இன்று (செப்டம்பர் 21) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் 2026 தேர்தலில் போட்டி என விஜய் கூறியது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “விஜய் சொல்வது ஒரு வகையில் உண்மைதான் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி. அது இரண்டாவது இடத்திற்கு வெற்றி பெற போவது யார் என்பதில் இருக்கும் போட்டி.
அதிமுக வெற்றி பெற்று 2026 இல் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க போவது எடப்பாடியார்தான். டிசம்பருக்கு பின் அதிமுகவிற்கு என்று ஒரு அலை உருவாகும். எடப்பாடியார் பின் மக்கள் திரள்வார்கள். தொண்டர்கள் திரள்வார்கள். அதிமுக வெற்றி பெற போகிறது. இரண்டாவது இடத்திற்கு தான் திமுகவா.. தவெகவா.. சீமானா.. என்ற போட்டி நிலவப்போகிறது.
அதிமுகவை எதிர்க்கும் சக்தி வேறு யாருக்கும் கிடையாது. அதிமுக தொண்டர்கள் புற்றீசல் போல் பொங்கி வரக்கூடியவர்கள். பிரச்சனை என்று சொன்னால் வீதியில் வந்து போராடும் போர்க்குணம் படைத்த தொண்டர்கள் அதிமுகவினர்.
ஆகவே மற்றவர்கள் சொல்வது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. களத்தில் அதிமுக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த கருத்தையும் சொல்லி எங்களை பின்வாங்க செய்ய முடியவே முடியாது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பின், திரையுலகில் இருந்து வந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் மதுரையில் தேமுதிக ஆரம்பிக்கும் போது கூடிய கூட்டம் அளப்பரியது. அவருக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். விஜய்க்கு அது போன்ற ஒரு தொண்டர்கள் கூட்டம் இன்னும் உருவாகவில்லை.
விஜய்க்கு மிகப்பெரிய கூட்டம் வருகிறது என்பது உண்மைதான். அதை மறுக்க முடியாது. அதுவெல்லாம் ஓட்டாக மாறுமா என்று சொன்னால் களத்தில் சென்று பணியாற்றக்கூடிய பக்குவத்தையும், தேர்தல் வியூகத்தையும், விபரங்களையும், மக்களை சந்திக்கின்ற பாங்கையும் அவர்கள் புரிந்து வைத்துக் கொள்கிற அளவிற்கு தேர்தல் முகவர்கள் ஆக மாற வேண்டும். இந்த அனுபவங்கள் இருந்தாலேயொழிய விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
அஜித்துக்கு இரண்டு மடங்கு
விஜய்யை விட அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் அதிகமாக கூடும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வராத கூட்டமா? ரஜினி ஏர்போர்ட்டில் வந்து நின்றபோது 5 லட்சம் பேர் வந்து நின்றார்கள்.. அவருக்கு இன்றும் அந்த மாஸ் உள்ளது. அவரைப் பார்க்க நானே வருவேன். திரையில் பார்த்த நட்சத்திரங்கள் நிஜத்தில் பார்க்கும்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்க்க நானே வருவேன். ஆகவே வித்தியாசமான ஒரு அணுகுமுறையோடு தான் விஜய் வருகிறார். ஆனால் அவர் தனித்து நின்று களமிறங்கி ஜெயிப்பது என்று சொல்வது எந்த காலத்திலும் நடைபெறாத ஒரு ஆசை. அவருடைய எண்ணம் ஒருக்காலும் நிறைவேறாது. அவருடைய முயற்சி எல்லாம் வீணாகத்தான் போகும். நிச்சயமாக அவர் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்றால் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவோடு கூட்டணி வைக்காவிட்டால் விஜய் அரசியலை திமுக இந்த தேர்தலோடு முடித்து விடும்.
ஆகவே விஜய் திமுக ஆட்சியை முழுமையாக தூக்கி எறிவேன் என்று சொல்வது உண்மை என்றால் நன்றாக யோசனை செய்து அதிமுகவினுடைய கூட்டணியைத்தான் நாடி வர வேண்டும். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பது தான் அவருக்கு சரியான ஆலோசனை. சரியான முடிவு.
அதை தாண்டி தனித்து களம் இறங்குவோம் என்று விஜய் சொல்வது திமுகவிற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் அவரது நடவடிக்கையை தமிழக மக்கள் பார்ப்பார்கள். மக்கள் திமுகவுக்கு மாற்றாக அதிமுகவை தான்தேர்ந்தெடுப்பார்கள்.. ஸ்டாலினுக்கு மாற்றாக எடப்பாடி பழனிசாமியை தான் முதலமைச்சராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். 2026ல் தமிழக அரசியலில் இதுதான் நடக்கும் என்பது உண்மை” என்றார்.