ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு, 2ஆம் வகுப்பு ஏசி பெட்டியிலும் காலியாக உள்ள இடங்களை கூடுதல் கட்டணமின்றி ஒதுக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. railway board allow 2nd ac coach for waiting list
ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் காத்திருப்போர் பட்டியலை சமாளிக்க, கூடுதல் பெட்டிகள் ஒதுக்குவது, ரயில் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது.
ஏற்கெனவே ரயிலில் பயணம் செய்ய ஏசி பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால், 2ஆம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதாவது, சாதாரண இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இன்றி அவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளில் இருக்கை வழங்கப்படும்.
தற்போது இந்த திட்டத்தில் ரயில்வே வாரியம் சில மாற்றத்தை செய்ய முன்வந்துள்ளது. அதன்படி, சாதாரண பெட்டியில் இரண்டாம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டி மட்டுமல்லாமல், 2ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2ஆம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ரயில்வே வாரிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றறிக்கை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.