நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 23) திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சியின் தவராா பகுதியில் உள்ள நடிகர் பிரித்விராஜின் சொகுசு வீடு மற்றும் கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள துல்கர் சல்மானின் வீடுகளில் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரளா முழுவதும் சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் பூடான் நாட்டின் ராணுவத்தின் உயர்ரக வாகனங்கள் ஏலமிடப்பட்டது. பல்வேறு அறிக்கைகளின் ஆதாரங்களின்படி, குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட பூட்டான் இராணுவ வாகனங்கள் சுங்க வரி செலுத்தாமல் இந்தியாவிற்குள் கடத்தப்படுவதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து விசாரணை தொடங்கியது. குறிப்பாக நடிகர்களை குறி வைத்து இந்த கார் விற்பனை நடந்ததாக தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் 30 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் விதிமுறைகளை மீறி கார் வாங்கினார்களா என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.