2024 மக்களவை தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் 2025 ஆம் ஆண்டுக்கான காங்கிரஸ் சட்ட மாநாடு இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலில் நம்முடைய கூட்டணி மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. ஆனால் வெறும் ஐந்து மாதத்திற்கு உள்ளாகவே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேறு மாதிரியான முடிவுகள் வந்தன.
எனக்கு என்ன பெரிய ஆச்சரியம் என்றால் குஜராத்திலோ அல்லது ராஜஸ்தானிலோ, ஒரு தொகுதி கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை என்பதுதான்.
2024 மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது. என்னிடம் இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
ஒரு மக்களவைத் தொகுதியின் வாக்காளர்கள் பட்டியலை ஆய்வு செய்தபோது மொத்தம் உள்ள 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள் என்பது தெரியவந்தது. இது போன்ற மோசடிகளால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
அவர்கள் 15 முதல் 20 தொகுதிகள் குறைவாக பெற்று இருந்தால் அவர் (மோடி) மீண்டும் பிரதமராகி இருக்க முடியாது.
நம் நாட்டில் தேர்தல் ஆணையம் இறந்துவிட்டது. 2014 முதல் ஏதோ தவறு நடப்பதாக எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
தேர்தல் முறைகேடு தொடர்பான தீவிரமான தேடலில், மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த வாக்குகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு விழுந்துள்ளது. இதற்கான ஆதாரமும் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.
தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கும் பீகாரில் தேர்தல் ஆணையத்தின் “வாக்கு திருட்டு” முறைகேட்டை அம்பலப்படுத்தும் “அணு குண்டு ஆதாரங்களும்” தன்னிடம் உள்ளன என்று குறிப்பிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ,இந்திய தேர்தல் ஆணையம் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்று நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணிபுரியும் அனைத்து தேர்தல் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளது.
அதுபோன்று பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராகுல் காந்தி தன்னிடம் அணுகுண்டு இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால், அவர் அதை உடனடியாக வெடிக்கச் செய்து, அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.