காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜனவரி 13, 2026) தமிழ்நாடு வந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அங்கு நடந்த பொங்கல் விழாவிலும் கலந்துகொண்ட ராகுல் காந்தி, கொட்டும் மழையில் நனைந்தபடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:”இன்று நாம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இது தகவல்கள் நிறைந்த யுகம். இங்கு எளிதாக தகவல்களை அணுக முடியும். தகவல்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொண்டு ஞானமாக செயல்படுவதை உறுதிப்படுத்துவது இங்கு கல்வி நிறுவனங்களின் வேலை. நாம் எல்லோருமே ஞானத்தோடு செயல்பட வேண்டும். ஞானம் இல்லாமல் நாம் செயல்பட்டால் இந்த உலமே மகிழ்ச்சியற்ற இடமாக மாறும். இந்த ஞானம் இல்லாமல் இருப்பதால் தான் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். இந்த பள்ளிகள்தான் மாணவர்களை ஞானமுள்ள மனிதனாக மாற்றுகிறது.
நான் இந்தப் பள்ளியில் சில மாணவர்களிடம் பேசியபோது, ‘உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் ஒரு ஆசிரியரைச் சொன்னார்கள். நான் ‘ஏன்?’ என்று கேட்டபோது, ‘அவர் மிகவும் அன்பானவர், கனிவானவர், நாங்கள் கூறுவதை கவனிப்பார்’ என்றனர். அந்த ஆசிரியருக்கும் எனது பாராட்டுகள். எனது போராட்டமும் அதைப் போன்ற ஒன்றுதான் என்று கூறியவர்.
இந்தியா அன்பு நிறைந்த தேசமாகவும், மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து, மற்ற மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மாணவ மாணவிகள் உயர்ந்த அரசுப் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி யாரும் பேசுவதில்லை. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; அதற்கான தகுதியையும் குணநலன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.
பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடியபோது, ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, கல்வி தனியார் மயமாகக் கூடாது. அதேசமயம், தரமான கல்வியை அளிக்க வேண்டும். அதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாட்டில் கல்வி மட்டுமல்ல அதற்கான வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும். ஐடி துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துறை பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்.தற்போது சீனா உற்பத்தியில் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. மேட் இன் சைனாவை என்பதை மாற்ற வேண்டும். சிறு குறு தொழிலாளர்களை ஊக்குவிக்க வேண்டும் மரியாதை அளிக்க வேண்டும்.” என்றார்.
மேலும் ஒரு மாணவரின் கேள்விக்கு பதலிளிக்கையில்’நான் எனது சிறுவயதில் எனது பாட்டி இந்திரா காந்தியிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள். பெண்கள் இன்னும் பல துறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும்’ என்றார்.மற்றொரு மாணவியின் கேள்விக்கு பதிலளித்தபோது, ‘பள்ளியில் நான் மிகவும் சுட்டியாக இருந்தேன். பள்ளி நாட்களில் அதிக கேள்விகளைக் கேட்டேன். ஆசிரியர்களுக்கே டஃப் கொடுத்தேன்’ என்று மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
விழாவில் மழையில் நனைந்த படி மாணவர்கள் அமர்ந்திருந்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டிருந்தார்.
