இந்திய அரசியல் அரங்கில் தற்போது ஒரு பிரேசிலிய டிஜிட்டல் இன்ஃப்ளூயன்ஸரின் புகைப்படம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலில் போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களில், பிரேசிலிய இன்ஃப்ளூயன்ஸர் லாரிசாவின் பழைய மாடலிங் புகைப்படம் இடம்பெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராகுல் காந்தியின் பகீர் குற்றச்சாட்டுகள்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டினார். “H-Files” என்ற பெயரில் டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் பல போலிப் பதிவுகள் மற்றும் போலி வாக்குகள் இருப்பதாகவும், 25 லட்சம் வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களுடன் வெளியிட்டார். ஒரே பிரேசிலிய மாடலின் புகைப்படம் 22 வாக்காளர்களின் பெயர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி போன்ற பெயர்களில் வெவ்வேறு நபர்களுக்கு ஒரே புகைப்படம் இடம்பெற்றிருந்ததைக் காட்டினார். தேர்தல் ஆணையம் போலியான பதிவுகளை நீக்கக்கூடிய மென்பொருளைக் கொண்டிருந்தும், அதைப் பயன்படுத்தத் தவறியது என்றும், இது பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) உதவும் சதி என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
லாரிசாவின் அதிர்ச்சி மற்றும் மறுப்பு
“இந்திய அரசியலுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனது புகைப்படம் ஒரு ஸ்டாக் இமேஜ் தளத்தில் இருந்து வாங்கப்பட்டு, எனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நான் அல்ல, நான் ஒருபோதும் இந்தியாவிற்கு வந்ததில்லை,” என பிரேசிலிய இன்ஃப்ளூயன்ஸரும் சிகையலங்கார நிபுணருமான லாரிசா ஒரு வீடியோவில் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில் லாரிசா கூறியிருப்பதாவது: “என்னால நம்ப முடியவில்லை — இந்த மக்கள் கிசுகிசுக்கிறார்கள், சிரிச்சுக்கிட்டே இருக்காங்க. இல்லை, இது கிசுகிசு தான், நான் இதை கிசுகிசு என்று சொல்லப் போறேன்.அவர்கள் என் பழைய போட்டோவை பயன்படுத்துறாங்க. அது ஒரு பழைய போட்டோ தான், சரியா? அந்த போட்டோவில் நான் இளமையாக இருந்தேன் — சுமார் 18 அல்லது 20 வயது இருக்கும். அந்த போட்டோவை அவர்கள் பயன்படுத்தி ஏதோ செய்கிறார்கள் — அது தேர்தல் சம்பந்தமானதா, அல்லது வாக்களிப்பதற்கானதா என தெரியலை. இந்தியாவில்தான்! என்னை இந்தியராக காட்டி மக்களை ஏமாற்றுறாங்க.. என்ன பைத்தியம் இது!எவ்வளவு பைத்தியமான உலகம் இது!
அப்புறம் ஒரு ரிப்போர்டர் எனக்கு கால் பண்ணினார் — நான் பதில் சொல்லலை. என் நம்பரை யாருக்கும் கொடுக்காதீங்கன்னு சொன்னேன். ஆனா அந்த ஆள் என் இன்ஸ்டாகிராமை கண்டுபிடிச்சு, அங்க கால் பண்ணினார். இப்போ இந்த விஷயத்துக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு ஆள், என் நண்பன், அவர் நகரத்தின் மறுபக்கத்தில் இருக்கிறார் — அவர் எனக்கு ஒரு போட்டோ அனுப்பினார். அதை இங்கே வைக்கிறேன் பாருங்க. நம்பவே முடியலையே..” இவ்வாறு அந்த வீடியோவில் லாரிசா தெரிவித்துள்ளார்.
லாரிசா போட்டோ வைரல்
மாத்தேயஸ் ஃபெரேரோ என்ற பிரேசிலிய புகைப்படக் கலைஞரால் 2017 மார்ச் 2 அன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இதுவரை 59.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 4,21,000 டவுன்லோடுகளையும் பெற்றுள்ளது. நவம்பர் 4, 2025 அன்று ஒரே நாளில் மட்டும் 1,73,000 பேர் இந்தப் புகைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
