மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பிப்ரவரி 2-ந் தேதி பேசும் போது கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ராகுல் காந்தி பேசுகையில், ”இது ராணுவத் தளபதி நரவனேவின் சுயசரிதையில் உள்ள பகுதி. இதை நீங்கள் கவனமாக கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் யார் தேசப்பற்று உடையவர், யாருக்கு தேசப்பற்று இல்லை என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
இது நான்கு சீன டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது நடந்த நிகழ்வு. டோக்லாம் பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடரை சீனா, ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதைப்பற்றி ராணுவத் தளபதி எழுதியுள்ளதிலிருந்து, ஒரு புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள கட்டுரையை நான் வாசிக்கிறேன்..” என்றார்.
ஆனால் இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதே போல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தார். “ராகுல் காந்தி குறிப்பிடும் புத்தகம் இன்னமும் வெளியிடப்படவில்லை. வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசுவதை சபாநாயர் அனுமதிக்கவே கூடாது” என ராஜ்நாத் சிங்கும் அமித்ஷாவும் அடுத்தடுத்து ஆவேசமாக பேசினர். இதனால் பாஜக எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு பதிலடியாக, காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முழக்கம் எழுப்ப மக்களவையில் அமளி அதிகமானது. ராகுல் காந்திக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.
இந்த காரசார மோதல்களால் மக்களவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 45 நிமிடம் நீடித்த இந்த அமளியைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது பற்றி நரவனே புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் மோடி, ராஜ்நாத்சிங் பற்றிய குறிப்புகளும் இருக்கிறது. இதனைத்தான் பேசவிடாமல் தடுக்கின்றனர். அப்படியானால் மக்களவையில் நான் என்ன பேசவேண்டும் என்பதை பாஜகவினரே எழுதிக் கொடுத்துவிடலாம்” என்றார்.
