சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ஆனால் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்து ஆளும் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நேற்று பேசிய ராகுல் காந்தி, “சீனாவின் ஆக்கிரமிப்பு” முயற்சிகளைப் பற்றி பேசினார். இதற்கு ஆதாரமாக முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள்காட்டினார்.
ஆனால் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களும் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்தனர்.
இந்நிலையில் இன்று மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். அதற்கு, “மக்களவையில் பேசுவது என்னுடைய உரிமை.. அதை தருவதற்கு நீங்கள் யார்?” என ஆவேசமாக கேள்வி கேட்டார் ராகுல். இன்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரங்களை ராகுல் காந்தி பேச முயற்சித்தார். இதற்கு மீண்டும் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்க சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
