வைஃபை ஆன் செய்ததும், ‘பம்பரமாக ஓடுறாங்களே‘ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா.. யாரு பம்பரமாக ஓடுவது?
விஜய்யின் தவெகதான்.. கரூர் சம்பவத்தால ஒட்டுமொத்த கட்சியே முடங்கி போச்சுன்னு விமர்சனம் செஞ்சாங்க.. இப்ப எல்லாமே தலைகீழாக மாறிடுச்சு..
ஓ..SIR போராட்டம் பற்றி சொல்றீரா?
ஆமாய்யா.. SIRக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துலயும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தவெக நடத்துச்சு.. சென்னையில புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கோவையில் அருண்ராஜ், மதுரையில நிர்மல்குமார், திருச்சியில ராஜ்மோகன் தலைமையில்னு அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடந்துச்சு..
கரூர் சம்பவத்துக்கு பிறகு நடக்கிற போராட்டமாச்சே..
ஆமா.. இந்த போராட்டத்தை தவெக தலைவர் நடிகர் விஜய், வீட்டில் இருந்தே ரொம்ப உன்னிப்பாக பல மணிநேரம் கவனிச்சுகிட்டே இருந்தாராம்.. சில இடங்களில் இருந்து வந்த லைவ் வீடியோக்களையும் போட்டோக்களையும் விஜய் பார்த்து ரொம்பவே ஹேப்பியாகிட்டாராம்.
இதுபற்றி விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசிய போது, “கரூர் சம்பவத்துக்கு பிறகு நடக்குற போராட்டம்.. இதுல எந்த குளறுபடியும் சர்ச்சையும் வந்துடக் கூடாதுன்னு ரொம்பவே கவனமாக இருந்தாங்க.. புஸ்ஸி ஆனந்த் எல்லா மாவட்ட செயலாளர்களையும் ஒருங்கிணைச்சு செயல்பட்டாரு..
இந்த போராட்டத்துல தமிழ்நாடு முழுவதும் சுமார் 30,000 பேர் கலந்துகிட்டாங்க.. இதுதான் தளபதிக்கு (விஜய்க்கு) ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.. அதிகபட்சமாக சென்னையில 3,000-க்கும் அதிகமானவங்க வந்தாங்க.. சென்னையை சுற்றி இருக்கிற மாவட்டங்களிலும் 1,000-க்கும் அதிகமானவங்க கலந்து கிட்டாங்க..
கரூரில தபால் ஆபீஸ் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துலயும் நூற்றுக்கணக்கானவங்க கலந்துகிட்டாங்க.. அதுவும் கைக்குழந்தைகளோடவும் வந்தாங்க.. அரியலூரில் கர்ப்பிணிகளும் கூட வந்தாங்க..
எல்லா ஊரிலுமே போராட்டத்துல கலந்துகிட்டவங்களுக்கான குடிக்க தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு இந்த முறை ரொம்பவே முக்கியத்துவம் தந்திருந்தாங்க..
பொதுவாக இளைஞர்கள்தான் வழக்கம் போல அதிகமாக வந்திருந்தாங்க.. அதுவும் 40 வயதுக்கு கீழே இருக்கிற பெண்களும் கணிசமாக கலந்துகிட்டாங்க.. பெண்கள் கணக்குன்னு பார்த்தா 7,000 பேரு வந்திருப்பாங்க..
போனமுறை வக்ஃபு வாரிய சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு கூட மொத்தமே 13,000 பேருதான் வந்திருந்தாங்க..அதனால இந்த முறை தளபதி ரொம்பவே சந்தோஷப்பட்டாரு… நல்ல கூட்டம் வந்திருக்கேன்னு சொல்லிகிட்டே இருந்தாரு.. பாஜக- காங்கிரஸ்னு நேஷனல் பார்ட்டிக போராட்டத்தும் நடத்துனாகூட இவ்வளவு கூட்டம் வராது.. அதனால தளபதி ரொம்பவே ஹேப்பிதான்” என்கின்றனர்
ஓஹோ.. ரொம்ப செலவு செஞ்சிருக்காங்களோ?
அப்படி எல்லாம் பெருசா செலவு செய்யலைன்னுதான் சொல்றாங்க.. “பேனர், போஸ்டர், மைக் மட்டும்தான்.. செலவே செய்யாம எங்க கூட்டத்தை பார்த்தீங்களான்னு” சில மா.செ.க்கள் நம்மிடம் பெருமையாகவே சொன்னாங்க..
அதென்னய்யா தவெக- காங்கிரஸ் கூட்டணி பற்றி பேசுறாங்க?
ஓய்.. நாமதான ரொம்ப காலமாகவே சொல்லிகிட்டு இருக்கிறோம்.. தவெகவுடன் கூட்டணி சேருவது பற்றி எல்லாம் ராகுல் சிந்திக்கவே இல்லைன்னு.. இப்ப அவங்களாகவே அதை சொல்றாங்க
சரி.. நெருப்பில்லாம புகையுமாய்யா?
அதென்னவோ உண்மை.. டெல்லிக்கு நெருக்கமான காங்கிரஸ் சீனியர்கள் நம்மிடம் பேசுகையில், “தவெக+ காங்கிரஸ் காம்பினேஷன் நல்லா இருக்குமான்னு விஜய் தரப்பும் ஒரு சர்வே நடத்துச்சு.. எங்க சைடுல கேரளாவின் கேசி வேணுகோபால் மாதிரி சிலரும் சர்வே எடுத்தாங்க.. அப்ப பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துச்சு.. அதனால விஜய் தரப்பும் ராகுல் காந்திகிட்ட ஒரு மூவ் செஞ்சது..
எங்க கேசி வேணுகோபால், கேரளா சிஎம்மாகனும்னும்.. அதுக்கு விஜய் ஆதரவு முக்கியம்னு நினைச்சுதான் இந்த மூவ் செஞ்சாரு… ஆனா, பார்ட்டி பிரசிடென்ட் கார்கேவும் சரி, ராகுல்ஜியும் சரி.. கொஞ்சம் கூட அசைஞ்சு கொடுக்கவே இல்லை.. கார்கேவும் ராகுலும் திமுகவைத் தவிர வேறு ஆப்ஷனைப் பற்றியே பேச தயாராகவே இல்லைன்னு முடிவோட இருந்தாங்க.. இருக்கிறாங்க..
செல்வப்பெருந்தகையும் கூட கார்கேகிட்ட, இப்படி ஒரு பேச்சு ஓடுதுன்னு கேட்டு பார்க்க.. அப்படி எல்லாம் எதுவுமே இல்லை.. சான்ஸே கிடையாதுன்னு கார்கே அடிச்சு சொன்னாரு.. இதனாலதான் செல்வப் பெருந்தகையும் கூட ஓபனாக பிரஸ்மீட்டில தவெகவுடனான காங்கிரஸ் கூட்டணிங்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு முடிச்சுவிட்டாரு.. தவெக பக்கத்தில் நிர்மல்குமாரும், விஜய்கிட்ட ராகுல் காந்தி பேசவே கிடையாதுன்னு அடிச்சும் சொல்லிட்டாரு.. அத்துடன் விஜய்யை முதல்வர் வேட்பாளர்னு ஏற்றுகிட்டதான் கூட்டணின்னு தங்களோட ரூட்டையும் சொல்லி இருந்தாரு நிர்மல்” என்கின்றனர்.
சரி.. பீகார் ரிசல்ட்டுக்கு பிறகு ராகுல் எப்படி இருக்கிறாராம்?
இதையும் நாம சோர்ஸ்களிடம் கேட்டோம்.. “ராகுல் காந்தி இதுவரை இல்லாத அளவுக்கு ரொம்பவே அப்செட்டாகிட்டாரு.. யாருகிட்டயும் பேசக் கூட இல்லை.. இவ்வளவு மோசமான ரிசல்ட் வரும்னு கொஞ்சம் கூட ராகுல் நினைக்கலை.. இன்னும் சொல்லப்போனா ரொம்பவே விரக்தி மனநிலையில்தான் இருக்கிறாரு ராகுல்..
அதனால பீகார் தேர்தல் பற்றி எந்த லீடரும் மீடியாகிட்ட பேசவே வேண்டாம்னும் கண்டிப்பா சொல்லிட்டாராம்.. அதேபோல டெல்லி குண்டு வெடிப்பு பற்யும் கூட எதுவும் மீடியாவுல பேசாதீங்கன்னும் ராகுல்ஜி கறாரா சொல்லி இருக்கிறாரு” என்கிற தகவலை டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
