பாரத தாயை விற்பதா… உங்களுக்கு அவமானமாக இல்லையா… : மோடி மீது ராகுல் கடும் தாக்கு!

Published On:

| By Kavi

இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசு ‘நம் நாட்டை’ விற்றுவிட்டது என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 11) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மொத்தமாக சரணடைவதற்கு சமம். 

இயந்திர மயமாக்கப்பட்ட அமெரிக்க பண்ணைகளுக்கு நீங்கள் கதவுகளை திறந்து விட்டுள்ளீர்கள். நமது ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கு நீங்கள் வழிவகை செய்துள்ளீர்கள். இது அவமானகரமானது. 

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட எந்த பிரதமரும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். 

ஆனால் பிரதமர் மோடி பாஜகவின் நிதி கட்டமைப்பை பாதுகாப்பதற்காக 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அடகு வைத்து விட்டார். 140 கோடி மக்கள்தான் நமக்கு சொத்து.

ADVERTISEMENT

நீங்கள் இந்தியாவை விற்று விட்டீர்கள். இந்தியாவை விற்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா. நமது தாயை, பாரதமாதாவை நீங்கள் விற்று விட்டீர்கள்” என்று பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். 

மேலும் அவர், ‘அமெரிக்கா தன்னை சர்வாதிகாரியாக காட்டிக்கொள்ள இந்தியாவை பயன்படுத்துகிறது. 

பாகிஸ்தான் ராணுவ தளபதியை காலை உணவுக்கு அழைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உபசரிக்கிறார். இந்த அரசு அதை வேடிக்கை பார்க்கிறது. இந்தியா மீதான வரி மூன்று சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

அதானியின் வழக்கை காட்டி பிரதமர் மோடியின் கழுத்தை அமெரிக்கா நெறித்துவிட்டது. 

வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் இலவசமாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு மோடியின் பாஜக அரசு வழி வகுத்துள்ளது.

நாங்கள் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், சமமாக பேசுங்கள் உங்கள் ஊழியர்களை போல நடத்தாதீர்கள் என்று முதலில் கூறியிருப்போம். இரண்டாவது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருப்போம்” என்று கூறினார்.

ராகுல் பேசும்போது அவையில் பிரதமர் மோடி இல்லை.

இந்நிலையில் ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, ‘இந்தியாவை யாரும் விற்கவில்லை.  காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது இந்தியா வலிமை இழந்து இருந்தது. பிரதமர் மோடி இந்தியாவின் வலிமைமிக்க பிரதமர்’ என்று தெரிவித்தார். 

ராகுல் காந்தி பேசி முடித்த ஒரு சில நிமிடங்களிலேயே பாஜக கடுமையான பதிலடி கொடுக்க தொடங்கியது. 

ராகுல் காந்தி நாடாளுமன்ற மாண்பை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டதாக பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்களவையில் முன் வைத்ததால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவரப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார். 

“ஒரு உறுப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முனவைக்க விரும்பினால் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வேண்டும். எனவே ராகுல் காந்தி முன்வைத்த கருத்துகளை உறுதிப்படுத்த அவரை அவைக்கு வரவழைக்குமாறு கோரியுள்ளேன். 

அதுபோன்று ராகுல் காந்தி எந்த அறிவிப்பும் இல்லாமல் ஹர்தீப் சிங் பூரி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகையின்மை குறித்தும் அவர் பேசியுள்ளார். ஆனால் இவரே அவைக்கு தாமதமாகத்தான் வருகிறார்” என்று சுட்டிக்காட்டினார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share