தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பணியாற்றி பின்னர் இயக்குநர், கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பல அவதாரமெடுத்து வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
எனினும் சினிமாவைத் தாண்டி தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் அவர் செய்து வரும் மருத்துவம், கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.
தன்னைப் போன்று பிறருக்கு தாராளமாக உதவி செய்யும் நடிகர் பாலா உள்ளிட்ட பலரையும் ஊக்குவித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தான் இயக்கி நடித்து வரும் ’காஞ்சனா 4’ திரைப்படத்திற்கு நடுவே முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது, அது மிகவும் சிறப்பாக வெளியாகி வருகிறது.
உங்களில் பலருக்குத் தெரியும், எனது படங்களுக்கு முன்பணம் பெறும் ஒவ்வொரு முறையும், நான் என் மனதிற்கு நெருக்கமான ஒரு புதிய சமூக முயற்சியைத் தொடங்குவேன். இந்த முறை, எனது முதல் வீட்டை குழந்தைகளின் கல்விக்காக இலவசப் பள்ளியாக மாற்றப் போகிறேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த வீடு எனக்கு மிகவும் நெருக்கமானது. ஒரு நடனக் கலைஞராக பணியாற்றி நான் வாங்கிய முதல் வீடு இது. பின்னர், நான் அதை ஒரு அனாதை குழந்தைகளுக்கான இல்லமாக மாற்றினேன், என் குடும்பமும் நானும் ஒரு வாடகை இடத்திற்கு குடிபெயர்ந்தோம்.
இன்று என் குழந்தைகள் வளர்ந்து வேலை செய்கிறார்கள், இந்த வீட்டை மீண்டும் ஒரு நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதில் பெருமைப்படுகிறேன்.
நான் நியமிக்கும் முதல் ஆசிரியர், என் வீட்டில் வளர்ந்த குழந்தைகளில் ஒருவர், இப்போது வளர்ந்து, படித்து தனது உழைப்பை திருப்பித் தரத் தயாராக இருக்கிறார் என்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
இந்தப் புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் எப்போதும் போல, எனக்கு தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது தொண்டு நிறுவனத்தில் படித்து தற்போது ஆசிரியராக வேலைபார்த்து வரும் வேளாங்கண்ணி என்பவரை இந்த இலவச பள்ளியில் முதல் ஆசிரியராக நியமித்துள்ளார் லாரன்ஸ்.
அவர் கூறுகையில், “நான் அண்ணனின் வீட்டில் இருந்து தான் தங்கி படித்தேன். எனக்கு எல்லா உதவியும் அவர்கள் தான் செய்தார்கள். தற்போது அவர் தொடங்கியிருக்கும் இந்த இலவச பள்ளியின் முதல் ஆசிரியராக பணியாற்ற உள்ளது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது எனத் தெரிவித்தார்.