சென்னை மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததாக சீனியர் மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட் (இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தும் கலாசாரம் புற்றுநோயைப் போல தீவிரமாக பரவியிருந்தது. இதன் உச்சகட்டமாக 1996 ஆம் ஆண்டு மாணவர் நவரசு கொலை நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு ”தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டம்” கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது, விருப்பமில்லாத செயல்களைச் செய்யத் தூண்டுவது ஆகியவை ராகிங் என வரையறுக்கப்பட்டது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். ராகிங் செய்து தண்டிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர் கல்வி நிறுவனத்திலிருந்து உடனடியாக நீக்கப்படுவார், வேறு எந்த நிறுவனத்திலும் சேர்க்கப்பட மாட்டார்.
இந்த சட்டத்தைத் தொடர்ந்து கொடூரமான ராகிங் மெல்ல மெல்ல குறைந்திருந்தது. இந்நிலையில் ராகிங் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளதா? என அச்சப்படும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரியில் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
சென்னை மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர் ஒருவரை ராகிங் செய்து கொடுமைப்படுத்தியதாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகம், குழு அமைத்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை அடிப்படையில் சீனியர் மாணவர்கள் 6 பேர், கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
