ADVERTISEMENT

2025-ம் ஆண்டின் முக்கியச் சொல் ‘Rage Bait’…நமக்கு ஏன் சும்மா இருந்தாலும் கோவம் வருது? ஆக்ஸ்போர்டு சொல்லும் ‘சீக்ரெட்’!

Published On:

| By Santhosh Raj Saravanan

rage bait oxford word of the year 2025 meaning internet psychology

காலையில் எழுந்ததும் போனைத் திறக்கிறோம். ஃபேஸ்புக், ட்விட்டர் (எக்ஸ்), இன்ஸ்டாகிராம் என எதைத் திறந்தாலும், நமக்குப் பிடிக்காத, நம்மை எரிச்சலூட்டும் பதிவுகள் தான் வரிசையாக வந்து விழுகின்றன. அதைப் பார்த்ததும் நமக்கு ரத்தம் கொதிக்கிறது. உடனே கமெண்ட் செக்ஷனில் போய் நாலு வார்த்தை திட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்க்கிறோம்.

நீங்கள் இப்படிச் செய்தீர்கள் என்றால், நீங்களும் அந்த வலையில் விழுந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதற்குப் பெயர்தான் Rage Bait. ஆக்ஸ்போர்டு அகராதி (Oxford Languages) இந்த 2025-ம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக (Word of the Year) இந்த ‘Rage Bait’ என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ADVERTISEMENT

எது Rage Bait? Rage என்றால் ‘கடும் கோபம்’; Bait என்றால் ‘தூண்டில்’ அல்லது ‘இரை’. சுருக்கமாகச் சொன்னால், “உங்களைக் கோபப்படுத்தவே உருவாக்கப்பட்ட தூண்டில்” என்று அர்த்தம்.

ஒரு பதிவர், அவருக்கு உண்மையிலேயே அப்படியொரு கருத்து இருக்கிறதோ இல்லையோ, வேண்டுமென்றே மக்களைக் கோபப்படுத்தும் வகையில் ஒரு பதிவைப் போடுவார்.

ADVERTISEMENT
  • உதாரணமாக: பிரியாணி என்பது உலகின் மிக மோசமான உணவு அல்லது விஜய்யை விட அந்தப் புது நடிகர் தான் மாஸ் என்று பதிவிடுவார்கள்.

இதைப் பார்க்கும் நமக்குக் கோபம் வரும். உடனே அந்தப் பதிவை ஷேர் செய்து திட்டுவோம், அல்லது கமெண்டில் சண்டை போடுவோம். இதுதான் அவர்களுக்கு வேண்டும்!

ஏன் இதைச் செய்கிறார்கள்? இணையத்தின் அல்காரிதம் (Algorithm) கணக்குப்படி, ஒரு பதிவிற்கு எவ்வளவு கமெண்ட், ஷேர் வருகிறதோ, அதுதான் ‘வைரல்’ ஆகும். “நல்ல பதிவு” என்று போட்டால் நாலு பேர் லைக் போடுவார்கள். ஆனால், “சர்ச்சையான பதிவு” என்று போட்டால் நாற்பது பேர் திட்டுவார்கள். அந்த ‘எதிர்மறை விளம்பரம்’ (Negative Engagement) மூலம் காசு பார்ப்பதுதான் இந்த ‘Rage Bait’ கலாச்சாரம்.

ADVERTISEMENT

ஆக்ஸ்போர்டு ஏன் இதைத் தேர்ந்தெடுத்தது? 2025-ல் ஆன்லைன் உலகம் முழுக்கவே இந்த உத்தியைப் பயன்படுத்தித்தான் இயங்குகிறது. அரசியல் கட்சிகள் தொடங்கி, இன்ஃப்ளூயன்ஸர்கள் (Influencers) வரை அனைவரும் மக்களின் கோபத்தை அறுவடை செய்து, தங்கள் ரீச்-ஐ (Reach) அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த மோசமான மனநிலையை 2025-ம் ஆண்டு அதிகம் சந்தித்ததால், இந்த வார்த்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாம் என்ன செய்ய வேண்டும்? அடுத்த முறை இணையத்தில் உங்களை எரிச்சலூட்டும் படியான ஒரு பதிவைப் பார்த்தால், உடனே எமோஷனல் ஆகி கமெண்ட் செய்யாதீர்கள். “ஓ… இது Rage Bait, என்னைச் சூடேத்தி குளிர்காயப் பார்க்குறாங்க” என்று புரிந்துகொண்டு, அந்தப் பதிவை அப்படியே கடந்து செல்லுங்கள் (Scroll Past).

உங்கள் கோபம் தான் அவர்களின் மூலதனம். அதை அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்காதீர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share