மின்சார ஆலைகளுக்கு அதிக சப்ளை!

Published On:

| By Balaji

மின்சாரத்துக்கான தேவை அதிகமாக இருந்த நிலையில் மின்னுற்பத்தி ஆலைகளுக்கான நிலக்கரி கூடுதலான அளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் பண்டிகை சீசனில் நாட்டின் மின் தேவை 14 சதவிகிதமும், அதைத் தொடர்ந்த நவம்பர் மாதத்தில் 5.5 சதவிகிதமும் அதிகரித்திருந்தது. இதனால் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டிய நெருக்கடியில் மின்னுற்பத்தி ஆலைகள் இருந்தன. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மின்னுற்பத்தி ஆலைகளுக்கான நிலக்கரி விநியோகம் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாக அரசு தரப்பு அறிக்கை கூறுகிறது. செப்டம்பர் மாதத்துக்கு முன்பாக மழை காரணமாக நிலக்கரி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலக்கரி விநியோகம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த டிசம்பர் மாதத்தில் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி இருப்பின் சராசரி அளவு 10 நாட்களாக உயர்ந்துள்ளது. அதேபோல, போதிய நிலக்கரி இருப்பில் இல்லாமல் தவிக்கும் மின்னுற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் (டிசம்பர் 10 வரை) ஒன்பதாகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் இதன் எண்ணிக்கை 14 ஆகவும், அக்டோபர் மாதத்தில் 18 ஆகவும் இருந்தது. நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து மிகத் தூரமாக அமைந்துள்ள மின்னுற்பத்தி ஆலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தைச் சீராக்க மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று நிலக்கரி அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இதற்காக ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து மூலோபாயத் திட்டம் வகுத்துள்ளதாகவும் நிலக்கரி அமைச்சக அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share