அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து எந்த வித காராணமும் தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்!
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.
தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன. தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்படுள்ளதாக தெரிகிறது.
இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “அரசு கேபிள் இணைப்பில் புதியதலைமுறை சேனலைத் தமிழ் சேனல்களின் வரிசையுடன் இடம்பெறச்செய்யாமல் பிற மொழி சேனலாகப் பட்டியலிட்டு தி.மு.க அரசு முடக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதே போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் ஜனம் நியூஸ் சேனலையும் அரசு கேபிள் இணைப்பில் இடம்பெறச் செய்யாமல் தடுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தங்கள் ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து முடக்கப்பார்க்கும் திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, தனக்கு எதிரான செய்திகள் வெளியே வரக்கூடாது எனத் தொலைக்காட்சி சேனல்களின் இணைப்பையும் முடக்கிவருவது திராவிட மாடலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்” என்று சர்வாதிகார அரசு நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. எத்தனை திரையிட்டு மறைத்தாலும், திசைதிருப்பு நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மேடையில் திமுக அரசின் அனைத்துத் தவறுகளும் பட்டியலிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாசிச தி.மு.க-வுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில், “கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சரே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.