“விருந்தினர்களைக் கடவுளாகப் போற்றும் நாடு இந்தியா” (Atithi Devo Bhava) என்று பெருமை பேசுகிறோம். ஆனால், அதே விருந்தினர்கள் நம் ஊர் நடைபாதையில் நடக்கும் அட்ராசிட்டிகளைப் பார்த்து, “சார், ப்ளீஸ் ரோட்டுல வண்டி ஓட்டுங்க” என்று கெஞ்சும் நிலை வந்தால்? அது அவமானமா அல்லது அவசியமா?
மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்த ஒரு சம்பவம், இப்போது இணையம் முழுக்க இந்த விவாதத்தையே கிளப்பியுள்ளது.
நடந்தது என்ன?
புனேவின் பிம்பிள் நிலாக் (Pimple Nilakh) பகுதியில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டிகள் வழக்கம் போல நடைபாதையில் (Footpath) ஏறி வண்டி ஓட்டினர். அப்போது அங்கு வந்த இரண்டு வெளிநாட்டு இளைஞர்கள், நடைபாதையில் வந்த பைக்குகளைத் தடுத்து நிறுத்தி, “இது நடப்பதற்கான வழி, வண்டியை ரோட்டில் ஓட்டுங்கள்” என்று சைகை மூலம் அறிவுறுத்தினர். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பொறுமையாக அவர்கள் இதைச் செய்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது.
இரண்டாகப் பிளந்த இணையம்:
இந்தச் செயலைப் பார்த்த நெட்டிசன்கள் இரண்டு விதமான கருத்துகளை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.
“தலைகுனிவு” (The Shame):
பெரும்பாலானோர், “நம் நாட்டுச் சட்டத்தை நமக்கே ஒரு வெளிநாட்டவர் வந்து சொல்லிக் கொடுப்பது எவ்வளவு பெரிய அவமானம்?” என்று வெட்கப்படுகிறார்கள். “நமக்கு அடிப்படை சிவில் சென்ஸ் (Civic Sense) என்பதே கிடையாதா? பள்ளிக்கூடத்திலிருந்தே இதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று பலர் ஆதங்கத்தைக் கொட்டுகின்றனர்.
“கட்டமைப்பு எங்கே?” (The Infrastructure Argument):
இன்னொரு தரப்போ, “ரோட்டில் இடம் இருந்தால் ஏன் நடைபாதையில் ஏறப்போகிறார்கள்? போக்குவரத்தைச் சரிசெய்யாத நிர்வாகத்தை விட்டுவிட்டு, அவசரத்தில் செல்பவர்களைக் குறை சொல்வது என்ன நியாயம்?” என்று எதிர்வாதம் செய்கிறார்கள். மேலும், “வெளிநாட்டினர் இதைச் செய்தால் ‘வாவ்’ என்கிறீர்கள், நம்ம ஊர்க்காரர் யாராவது இதைச் செய்திருந்தால் அங்கே சண்டையே வந்திருக்கும்” என்ற யதார்த்தத்தையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெங்களூரு முதல் புனே வரை:
இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பெங்களூருவில் உடைந்த நடைபாதைகளைச் சுட்டிக்காட்டி ஒரு வெளிநாட்டு நபர் வீடியோ வெளியிட்டபோது, மாநகராட்சி உடனடியாக அதைச் சரிசெய்தது. “உள்ளூர் மக்கள் ஆயிரம் முறை சொன்னாலும் கேட்காத அதிகாரிகளும், மக்களும், ஒரு வெள்ளைக்காரர் சொன்னால் மட்டும் கேட்பது ஏன்?” என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
சாலை விதிகள் என்பது அபராதத்திற்குப் பயந்து கடைப்பிடிப்பது அல்ல; அது சக மனிதர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. “நம் குப்பையை நாமே தொட்டியில் போடுவது”, “வரிசையில் நிற்பது”, “நடைபாதையை ஆக்கிரமிக்காமல் இருப்பது” போன்ற அடிப்படை ஒழுக்கங்களை வெளிநாட்டினர் வந்து நமக்குச் சொல்லிக்கொடுக்கும் முன், நாமே திருந்தினால் மட்டுமே ‘விஸ்வகுரு’ கனவு சாத்தியமாகும்!
