புதுச்சேரியில் டிசம்பர் 9-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி விஜய், ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கரூரில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து புதுச்சேரி ரோடு ஷோவுக்கு அனுமதி தரப்படவில்லை.
அதேநேரத்தில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தரப்பட்டது. புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் டிசம்பர் 9-ந் தேதி விஜய் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் காரில் நின்றபடியே பொதுமக்களிடம் விஜய் பேசுகிறார். இந்த கூட்டத்துக்கு மொத்தம் 2 மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மைதானத்துக்குள் தவெகவினர் உள்ளே வந்து செல்ல தனி நுழைவு வாயிலும் விஜய் வந்து செல்ல தனி நுழைவு வாயிலும் அமைக்கப்படுகின்றன. இப்பொதுக் கூட்டத்துக்கு 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விஜய் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்துக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
- தமிழக தவெகவினர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது
- 5,000 பேர் மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்
- பொதுக் கூட்டத்தில் பங்கேற்போருக்கு QR கோடுடன் பாஸ் வழங்கப்படும்.
- அனைவருக்கும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும்
- மருத்துவ குழு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்
- முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு பாஸ் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
