காங்- திமுக ஆட்சியில் சோனியா குடும்பத்தின் ஏடிஎம் புதுச்சேரி.. ’போதை’ மாஃபியாக்கள் அதிகம்.. மோடி சரமாரி சாடல்!

Published On:

| By Mathi

Modi Puducherry

புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ்- திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் கடத்த மாஃபியால் அச்சமின்றி நடமாடினர்; புதுச்சேரியை சோனியா குடும்பத்தின் ஏடிஎம் போல பயன்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் இன்று மார்ச் 1-ந் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: புதுச்சேரியில் உங்கள் முன்னால் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை இந்தப் புதுச்சேரியில்தான் தொடங்கி வைத்தார். இங்கிருந்துதான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் முழு உலகிற்கும் ஒரு புதிய ஆன்மீகப் பார்வையை வழங்கினர்.

ADVERTISEMENT

பெஸ்ட் புதுச்சேரி

நான் இதற்கு முன்பு புதுச்சேரி வந்திருந்தபோது ‘BEST’ புதுச்சேரி என்ற ஒரு தாரக மந்திரத்தை வழங்கினேன்.
‘BEST’ என்றால் B – Business (வணிகம்) E – Education (கல்வி)S – Spirituality (ஆன்மீகம்) T – Tourism (சுற்றுலா).

ADVERTISEMENT

மத்திய அரசும் மாநில அரசும் ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும்போது முடிவுகள் விரைவாகவும் சிறப்பாகவும் இருக்கும். புதுச்சேரி தனிநபர் வருமானத்தில் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இன்று ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்தும்.

இரட்டை எஞ்சின் அரசு

ADVERTISEMENT

இப்போதுள்ள இரட்டை எஞ்சின் என்.டி.ஏ (NDA) அரசு, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் வேகத்தைக் கொடுக்கும். மத்திய அரசும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசும் இணைந்து செயல்படுவது மாநிலத்தின் வேகமான வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக உள்ளது. இந்த ‘இரட்டை எஞ்சின்’ சர்க்கார் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் புத்துயிர் அளிக்கும்

இந்த ஆண்டு பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சாதனை அளவாக 12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ‘மூலதன முதலீட்டு சிறப்பு உதவித் திட்டம்’ தற்போது புதுச்சேரிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறந்த சாலைகள், குடிநீர் வசதி, கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். கல்வி மற்றும் இளைஞர் நலன் வலுவான மற்றும் அதிகாரம் பெற்ற இளைஞர்களே நாட்டின் வளர்ச்சியின் அடிப்படை எனக் கருதப்படுகிறது.

காரைக்கால் NIT-ல் புதிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பொறியியல் பிரிவு மற்றும் நவீன விடுதி வசதிகள் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்விக்கு உதவும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய விரிவுரை அரங்குகள், மாணவிகளுக்கான விடுதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. நடத்தப்படாத நேரடிப் பணி நியமனத் தேர்வுகள் தற்போது நடத்தப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகள்

நண்பர்களே, இன்னைக்கு உலகம் முழுக்க இருக்குற பெரிய சவால் என்னன்னா தூய்மையான, பசுமையான மாசில்லாத ஒரு போக்குவரத்து. மின்சார வாகனம்ங்கிறது நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான அங்கமா ஆயிடுச்சு. புதுச்சேரி போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலத்தில மின்சாரப் பேருந்துகள் மிக முக்கியமான மாற்றமாக இருக்குது. பிஎம் இ-சேவா பஸ் இந்தத் திட்டத்துல மின்சாரப் பேருந்துகள் இன்றைக்கு புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.

இன்று எங்க திட்டத்தோட தொடர்புடைய வீட்டு வசதித் திட்டங்கள் பல குடும்பத்துக்கு நிம்மதியையும் கண்ணியத்தையும் கொடுத்திருக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் புதுச்சேரிக்கு, காரைக்காலுக்கு, மாகே, ஏனத்துக்கு இங்கெல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கு. இதெல்லாம் மக்களுக்கு நேரடியாகப் பலன் கொடுக்கும்.

மாநிலத்தில கடின நீர்ல உப்பு நீக்கி குடிநீரா மாற்ற அந்தச் சுத்தமான குடிநீரை உறுதி செய்யும் திட்டமும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களும் இதெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கு. மழைக்காலத்துல வெள்ள நீர் தேங்காமல் நம்ம அரசாங்கம் இவற்றையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி மக்களுக்கு எப்பவுமே நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதைத்தான் அடிப்படை நோக்கமாகக் கொண்டு நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இங்கே சில குழந்தைகள் ரொம்ப அழகான படங்கள் எல்லாம் வரைஞ்சு இங்கே காட்றாங்க நான் பாக்குறேன். அருகில் இருக்க நம்ம தொண்டர்கள் அந்தப் படத்த வாங்கி என் பார்வைக்கு இங்கே கொண்டு வரும்படி அன்போடு கேட்கிறேன்.

போக்குவரத்து சாலை மேம்பாடு

நண்பர்களே, இணைப்பு ‘connectivity’ங்கிறது தான் ஒரு முன்னேற்றத்துக்கான முதுகெலும்பு. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள் கட்டமைப்பில நாங்க இதனால அதிக கவனம் செலுத்துறோம். ஒருபுறம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளெல்லாம் கட்டப்பட்டு வருது. மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சின்ன சின்ன வியாபாரம் செய்ற வணிகர்கள் இருக்காங்களே இவங்களுக்குள்ள ஒரு பரஸ்பர இணைப்பை இது போன்ற சாலை மேம்பாடு தான் உறுதி செய்கிறது. அதே நேரத்துல புதுச்சேரியில இருக்குற ‘traffic congestion’ போக்குவரத்து நெரிசலை எப்படிலாம் குறைக்கலாம்னு நாங்க இப்பவே திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். புதுச்சேரி நகர்ல 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள புதிய நலத்திட்டங்களை அறிவிச்சிருக்கோம். இதுல ஒரு பெரும் தொகையாக 440 கோடி ரூபாய், 140 கோடி ரூபாய் மதிப்புள்ள மேம்பாலமும் அடங்கும்.

நண்பர்களே, கிழக்கு கடற்கரை சாலை அப்புறம் GST ரோடு இதை மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது, விரைவாக்குகிறது. இனிமே புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணி நேரம் இல்ல ரெண்டு மணி நேரத்துல நீங்க போக முடியும்.

புதுச்சேரியில இருந்து கடலூருக்கு தேசிய நெடுஞ்சாலை ஏற்கனவே முடிச்சாச்சு. மேலும் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையும் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை திட்டங்கள்ல கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டிருக்கு. இந்த திட்டங்கள் புதுச்சேரியின் சில பகுதிகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற பொருளாதார மையங்களோட இணைக்குது. இதனால புதுச்சேரியோட பொருளாதாரம் மேம்படும், இந்த சுற்றுலா வர்த்தகம் தொழில் துறை இது எல்லாத்தையும் இந்த சாலை மேம்பாடு உயர்த்தும்.

நண்பர்களே, புதுச்சேரியோட மிகச் சிறந்த பலமே அதன் சுற்றுலா தான். வார இறுதி சுற்றுலா தளமாக ஆயிரக்கணக்கான மக்களை புதுச்சேரி ஈர்க்கிறது. இதனாலதான் ரயில்களும் விமானங்களும் எப்பவும் கூட்டமா இருக்கு. புதுச்சேரி மக்களின் அந்த அன்பும் அரவணைப்பும் தான் இதற்கு முக்கியமான காரணம்.

ஆன்மீகச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுகாதாரச் சுற்றுலா ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நாங்கள் இதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறோம். ‘Prashad’ திட்டத்தின் கீழ், பல்வேறு கோவில்களில் யாத்திரை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. .

அன்னை அவர்கள் ஆரோவில்லை உணர்வின் உலகளாவிய நகரமாகக் கண்டார். ஆரோவில்லில் இன்று உலகளாவிய ஆன்மீக மஹோத்சவம் தொடங்குவதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய கூட்டங்கள் பிராந்தியங்கள் மற்றும் மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கின்றன.

நண்பர்களே, புதுச்சேரி சுற்றுலா என்பது ரொம்ப பலம் வாய்ந்ததாக உயர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாவில் புதுச்சேரி மிகப்பெரிய பங்கை அளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வார இறுதிகளில் மக்கள் எல்லாம் வருகை தரும் ஒரு வசந்த பூமியாகப் புதுச்சேரி அனைவரையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இது காரணம் என்ன? மக்களோட அன்பு, மக்களோட அரவணைப்பு, இந்த ஊருக்கு வரணும்னு பக்கத்து மாநிலத்து மக்களை எல்லாம் இருக்கிறது.

ஆன்மீகச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சுகாதார சுற்றுலா இதில் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் நாங்க புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வோம். இன்னும் சொல்லப்போனால் இந்தப் பிரசாத் திட்டம் (PRASAD scheme) மூலமாகப் பண்பாட்டுப் பரப்புரையின் மூலம் பல்வேறு கோயில்களில் புனித யாத்திரை வசதிகளையும் மேம்படுத்துவோம், அதுவும் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் ஆகட்டும், ஸ்ரீ அன்னை ஆகட்டும் ஆரோவில்லை வந்து உலகளாவிய ஒரு அமைதி மையமாக, அமைதி நகரமாக உருவாக்கினார்கள். இன்னைக்கு அந்த ஆரோவில்லில் ஆன்மீக மஹோத்சவம் நடைபெறுகிறது என்பதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாதிரியான ஒரு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மொழி, இனம், மதங்களை எல்லாம் கடந்து மக்களை ஒன்றாக இணைக்கின்றன.

காங்கிரஸ்- திமுக ஆட்சிக் காலம் எப்படி இருந்தது?

நண்பர்களே, இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் செய்யப்படும் நற்பணிகளைக் கொண்டாடுவது முக்கியம். ஆனால், அதற்கு முன்னதாக விஷயங்கள் எவ்வாறு இருந்தன என்பதை நினைவில் கொள்வதும் முக்கியம்.

நண்பர்களே, இரட்டை என்ஜின் அரசாங்கத்தால செய்யப்படுற நல்ல பணிகளை எல்லாம் நீங்க கொண்டாடுறது முக்கியம். அதை விட முக்கியம் என்ன தெரியுமா? முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எத்தனை மோசமாக இருந்தது அதையும் நீங்க கண்டிப்பா நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ்-திமுக ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டாங்க? கடினமான அந்த ஆண்டுகள், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஊழல் பெருகி, குற்றங்கள் அதிகமாகி, ஏழைகள் துன்பப்பட்டதைக் கடினமான அந்த காலத்தைக் கவலைமிக்கக் காலத்தை நம்ம மறந்துடக்கூடாது. ரேஷன் கடையில அரிசி இல்லை, சம்பளம் கிடைக்கல, குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சமில்லாமல் தெருவில நடமாடின மோசமான காலம் அது.

நண்பர்களே, டெல்லியில் அமர்ந்திருக்கும் ஒரு குடும்பத்திற்காகப் புதுச்சேரியை காங்கிரஸ் ஒரு ஏடிஎம் (ATM) ஆக மாற்றியிருந்தது. திமுகவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிலும் நடக்கும் நீண்ட ஊழல் பட்டியல்களை நீங்கள் பார்க்கிறீர்கள். காங்கிரஸும் திமுகவும் புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தில் வேகத்தடைகளாக மாறியிருந்தன. இப்போது அதே சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்காகப் பசியுடன் இருக்கின்றன. ஊழல் மற்றும் குற்றங்கள் நிறைந்த அந்த சகாப்தத்திற்குப் புதுச்சேரி மீண்டும் செல்ல வேண்டுமா? புதுச்சேரி மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

வளர்ச்சிப் பாதையைத் தடுக்கிற வேகத்தடையாகத்தான் இருந்திருக்காங்க. ஆனா, அதே சக்திகள், புதுச்சேரி வளர்ச்சியைத் தடுத்த அதே சக்திகள், மீண்டும் அதிகாரத்துக்கு வர்றதுக்காக ஏங்கிட்டு இருக்காங்க. ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் புரிந்த அந்த கட்சிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வரவேண்டுமா? புதுச்சேரி மக்கள் அதை விரும்ப மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும்.

நண்பர்களே, புதுச்சேரி நம்ம சுதந்திரப் போராட்டத்துல மிக முக்கியமான மையப்புள்ளியா இருந்தது. பல தலைவர்கள் இங்கேதான் உருவானார்கள், இங்கேதான் உரமானார்கள். அவர்களில் சிலர் இங்கிருந்துதான் பணியாற்றினாங்க. 1947-ல சுதந்திரம் வர்றதுக்கு புதுச்சேரிதான் மிகவும் உதவிகரமாக இருந்தது. இப்ப நமக்கு ஒரு கடுமையான சவால். 2047-க்குள்ள புதுச்சேரியை ஒரு வளர்ச்சியடைந்த புதுச்சேரியாக மாற்ற வேண்டும். வலிமையான இந்தியாவாக, வளர்ந்த இந்தியாவாகவும் உருவாக்க வேண்டும். புதுச்சேரியோட டபுள் இன்ஜின் சர்க்கார், இரட்டை இன்ஜின் அரசாங்கம் இந்தப் பணியில உங்களோட இணைந்து பணியாற்றும். சிறந்த ‘BEST’ புதுச்சேரிக்காக உங்களுக்காக நாங்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன். நன்றி! இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share