ஆப்பில் முதலீடு செய்தால் 30 நாட்களில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று சொன்னதை நம்பி 100க்கும் மேற்பட்டோர் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பணமோசடி தொடர்பாக எத்தனை விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிட்டாலும், அவை தொடர்ந்து தான் வருகின்றன. ஆரம்பத்தில் கிடைக்கும் சொற்ப பணத்தை நம்பி பலர் லட்சம், கோடிக்கணக்கில் இழந்துவிட்டு பின்னர் அதுகுறித்து கண்ணீருடன் புகாரளிப்பது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ’ஸ்டார்லிங்க்’ என்ற மொபைல் ஆப்பில் முதலீடு செய்தால், அந்த பணத்திற்கு இரண்டு மடங்காக 30 நாட்களில் பணம் தருகிறோம் என்று ஒரு மோசடி கும்பல் கூறியுள்ளது.
அதனை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணையவழி மூலம் வந்த லிங்க் மூலமாக இணைந்து முதலீடு செய்திருக்கின்றனர். குறிப்பாக 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 400 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்தது போல் போலியாக காண்பித்து இருக்கின்றனர்.
மேலும் இந்த முதலீட்டில் புதிதாக ஒரு நபரை இந்த ஸ்டார்லிங்கில் சேர்த்து விட்டால் எட்டு சதவீதம் கமிஷன் தொகை கிடைக்கும் கூறியதை நம்பி, பல்வேறு நபர்களை புதிதாக இணைத்தும் விட்டுள்ளனர்.
முப்பது நாள் முடிவில் கோடிக்கணக்கில் கிடைக்கப் போகும் பணத்தை நினைத்து பார்த்து நாள்தோறும் நம்பிக்கையுடன் ஆயிரம் முதல் கோடி வரை என பலர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சரியாக 30வது நாளில் அவர்கள் வைத்திருந்த ஆப் இணைப்பு செல்போனில் இருந்து மாயமாக மறைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்களும், இன்று முதலியார் பேட்டை சேர்ந்த 5 நபர்களும், ஸ்டார்லிங்க் ஆப் மூலம் பணம் செலுத்தி ஏமாந்ததாக புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
தற்போது வரை இது சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும், இதில் மட்டுமே 10 லட்ச ரூபாய்க்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளதாகவும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், “பொதுமக்கள் யாரும் இதுபோன்ற இணைய வழியில் வருகின்ற எந்த ஒரு முதலீட்டு அழைப்பையும் ஏற்று முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணைய வழி காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.