புலி படத்தால் அவமானப்படுத்தப்பட்டேன். துரோகியானேன். எதிரிக்கு கூட என் நிலைமை வரக்கூடாது” என அப்படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் வேதனையை தெரிவித்துள்ளார்.
125 படங்களை வெளியிட்டதற்காக டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் முன்னாள் PRO-வுமான PT செல்வகுமாருக்கு இன்று (ஆகஸ்ட் 25) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டூடியோவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “காசே தான் கடவுளடா படத்தை இயக்க தயாராகி வந்தேன். அப்போது ஒருநாள் விஜய் வீட்டுக்கு கூப்பிட்டார். அவர், “அண்ணே அடுத்தபடம் நீங்கதான் பண்ண வேண்டும்” என்று சொன்னார். நான் ஷாக்காகி. ’PRO தானே?’ என்று கேட்டேன், ”எத்தனை நாள் PROஆகவே இருப்பீங்க? என்னை வச்சி படம் புரொடியூஸ் பண்ணுங்கண்ணே”னு சொன்னார். நான் என்ன சொல்றாருனு தெரியாமல் பேச்சுவராமல் உளர ஆரம்பித்துவிட்டேன். ”அண்ணே சிம்புதேவன் டைரக்டர், குழந்தைங்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு படம், நீங்க புரொடியூஸ் பண்ணுங்க”னு சொன்னார். சரி என்ற வெளியே வந்தேன். ’நம்ம விஜய் வச்சி படம் பண்ணபோறோம்’ என்று ஆனந்தமாக இருந்தது.
எனக்கு பிசினஸ் மூளை என்பதை விட பத்திரிகையாளன் மூளை. அப்படிதான் யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் கதையின் படி வில்லி கதாபாத்திரத்திற்கு நடிகை ஷோபனாவும், தளபதியாக நாசரும் தான் இருந்தனர்.

நான் தான் இந்தி மார்க்கெட்டை உருவாக்கலாம் என நினைத்து, ஸ்ரீதேவியை நடிக்கவைக்கலாம் என்று சொன்னேன், அவரை எப்படி அழைத்துவர முடியும் என சொன்னார்கள். ஆனால் நான் 3 நாட்கள் மும்பையிலேயே தங்கியிருந்து, 16 வயதினிலே படம், மயில் கதாப்பாத்திரம் என எனக்கு பிடித்தவற்றை அவரிடம் பேசினேன். இந்த ரசிகனின் அன்பைக் கண்டு அவர் எனக்கு கால்ஷீட் கொடுத்தார். அதேபோல சுதீப்பிடம் சென்றபோது, ’நீங்க விஜய் மேனேஜர் இல்லையா? என்னை அவரிடம் அடி வாங்க வைக்க பாக்குறீங்களா?’ என்று கேட்டார். அவரிடம் கதாப்பாத்திரத்தை விளக்கி, அவர் கேட்ட சம்பளத்தில் பாதியை உடனடியாக கொடுத்து நடிக்க கால்ஷீட் வாங்கினேன்.
புலி தான் முதல் பான் இந்தியா படம். உலகத்தரமான கிராபிக்ஸ், ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள். 100 கோடி வியாபாரத்தை எட்டிய முதல் படம். இப்படி எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் என் கெட்ட நேரம். ஆனால் ’இவன் எப்படி விஜய்க்கு மிக நெருக்கமாக இருக்கிறான், எதுவென்றாலும் விஜய் செல்வக்குமாரிடம் தான் கேட்கிறார். இவனை என்ன பண்ணலாம்’ என எனக்கு எதிராக சிலர் சதி செய்து கொண்டிருந்தனர். அது எனக்கு தெரியாது. படத்திற்கு முந்தைய நாள் காலையில் விஜய் வீடு, விஜய் அப்பா வீடு, என் வீடு, இயக்குநர் என அனைத்திலும் ஐடி சோதனை நடந்தது. கூட இருந்தவர்களே எனக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள்.
இரவு வரை நடந்த சோதனையால் படம் வெளியாகாதோ என்ற சூழல் உருவானது. செய்தியிலும் வெளியாகாது என அறிவிப்பு வெளியாகிவிட்டது. வீட்டிலிருந்த ஒரு பேப்பரை கூட விடாமல் அள்ளிக்கொண்டு போனார்கள். என் 27 வருட உழைப்பு ஒரே படத்தில் சுக்குநூறாக்கப்படுகிறது.
நான் ஒன்றும் பெரிய பணக்கார வீட்டு பிள்ளையா? உழைப்பால் மட்டுமே முன்னேற முடியும் என நம்பிக்கை கொண்டவன்.

இரவு 10 மணிக்கு வெளியே வந்தேன். தலையை அடமானம் வைத்தாவது ரிலீஸ் செய்வேன் என என்னிடம் இருந்த ஒட்டுமொத்த பணம், வீட்டு பத்திரம் என அனைத்தையும் போட்டு சொன்ன தேதியில் புலி படத்தை ரிலீஸ் செய்தேன். ஆனால் படத்தில் தவளை பேசுகிறது, பல்லி பேசுகிறது என விமர்சனம். படம் பயங்கர தோல்வி. வேறொருவராக இருந்தால் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் விவேகானந்தரின் வார்த்தை எனக்கு தைரியம் கொடுத்தது.
புலி படத்தால் அவமானப்படுத்தபட்டேன். துரோகியானேன். பல ரகசியங்கள் இருக்கு அதையெல்லாம் சொல்ல முடியாது. எதிரிக்கு கூட என் நிலைமை வரக்கூடாது” எனத் தெரிவித்தார்.
சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புலி’. இப்படத்தில் விஜய் உடன் நடிகை ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ஷிபு தமீன்ஸ் மற்றும் பிடி செல்வகுமார் ஆகியோரால் தயாரித்திருந்தனர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், வெளியான முதல் காட்சி முதலே கடும் விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.