சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தேர்தலில் திமுக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வி இயக்குநரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று (டிசம்பர் 27) எழும்பூரில் உள்ள முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 28) மூன்றாவது நாளாக சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்த ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தின் போது ஆசிரியர் பாலமுரளி என்பவர் மயக்கம் அடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
