கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காததைக் கண்டித்து கோவை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Protest against Union Education Minister at kovai
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காக நேற்று இரவு கோவை வந்தார். இதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 18) காலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமானத்தில் கோவை வந்தடைந்தார்.

இந்நிலையில் இன்று காலை லீ மெரீடியன் ஓட்டலில் கோவையை சேர்ந்த பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான கே.பி ராமசாமி, சக்தி சுகர்ஸ் நிர்வாக இயக்குநர் மாணிக்கம், கிருஷ்ணா கல்வி குழும தலைவர் மலர்விழி, ஜிஆர்ஜி குழும தலைவர் நந்தினி ரங்கசாமி, பார்க் கல்வி குழும தலைவர் அனுஷா ரவி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களும் கல்வியாளர்களும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது புதிய கல்விக் கொள்கை, தொழில் துறையில் இருக்கும் பிரச்சனைகள் என பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளார் எஸ்.ஆர்.சேகர், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து திருப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற தர்மேந்திர பிரதான், முன்னதாக கோவை கேபிஆர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கோவை வழியாக பாலக்காடு சென்ற போது கோவை புறவழிச் சாலையில் அவருக்கு எதிராக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுத்ததால் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.