பிரதமர் மோடி கோவை வந்துள்ள நிலையில் தமிழகத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட நிராகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டிற்கு தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். இம்மாநாடு வரும் நவம்பர் 21-ந் தேதி வரை நடைபெறும். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தற்போது துவக்கி வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவத்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’களின் சார்பில் கோவை மற்றும் மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் – மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும் – 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
