அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவிகிதம் வரை உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த வரி விதிப்பால் திருப்பூர் ஜவுளி, பின்னலாடை தொழில் கடும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பார்ட்டம் நடந்தது.
மதச்சார்ற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. ஆ.ராசா தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், சுப்பராயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து உரிய நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஹிந்தி, தமிழ் வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை தலையில் தூக்கி பிடித்து கொண்டு சாரை , சாரையாக மக்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஒரே மாஸ்க்கில் மோடியும், டிரம்பும் இருக்கும் முகமூடிகளை அணிந்திருந்தனர்.

மேலும் ’ஹிந்தி தெரியும் எங்களை வாழ வைக்கும் திருப்பூரை காப்பாற்று. மோடி ஜி! அமித்ஷா ஜி!’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இதே வாசகம் அடங்கிய பதாகைகள் ஹிந்தியிலும் இடம் பெற்றிருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
