தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் ஆராய்ச்சி கட்டுரை வழங்கினால் மட்டுமே பதவி உயர்வு என்ற நடவடிக்கையினை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள், இணை பேராசியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் உள்ள வேளாண்மை பல்கலை கழக வளாகத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பதவி உயர்விற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என கூறி இந்த ஆண்டு 30 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள் பல்வேறு பணிகளை பார்த்துக் கொண்டே ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சி கட்டுரைகளை கொடுப்பது என்பது கடினமான விஷயம். ஒரு ஆராய்ச்சி கட்டுரைக்கு குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். இதனால் அந்த நடவடிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பேராசியர்களுக்கான தகுதி நிர்ணயம் செய்ய UGC , ICAR விதிமுறைகளை பல்கலை கழக நிர்வாகம் பின்பற்றவில்லை. இந்தியாவில் 63 வேளாண்மை பல்கலை கழகங்கள் இருக்கின்றது. வேறு எந்த ஒரு பல்கலையிலும் இது போன்ற விதிமுறைகள் இல்லை . ஆண்டுதோறும் ஆராய்ச்சி கட்டுரை என்ற விதிமுறை சரியானது இல்லை என்பதை தமிழக அரசு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பதவி உயர்விற்கான ஸ்கோர்கார்டு முறையினையே ரத்து செய்ய வேண்டும். தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்குவதோடு ஏற்கனவே போடப்பட்ட பட்டியலை ரத்து செய்து ஒரே பட்டியலாக வழங்கிட வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும் ஆராய்ச்சி கட்டுரை இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதில்லை மதிப்பெண்கள் போடும் ஆசிரியர்களே மதிப்பெண்ணிற்காக காத்திருக்கும் நிலை இருப்பதாகவும் , இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு பணிபுரியும் பேராசிரியர்களுக்கு தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.