தமிழகம் முழுவதும் ஜனவரி 10-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 25-ஆவது திரைப்படமான ‘பராசக்தி’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 1965-ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைக் களமாகக் கொண்டு, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் ‘பராசக்தி’.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் நடிப்பில் தமிழ் மொழியைப் பாதுகாக்க – இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட அடுத்த தலைமுறைக்குக் கடந்த கால வரலாறுகளை முன்வைத்து ‘அரசியல் வரலாறு’ பாடம் நடத்தியிருக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
1965-ல் பொள்ளாச்சியில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் போது 250 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்ட மறைக்கப்பட்ட வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தணிக்கை வாரியத்தின் உத்தரவுப்படி 52 இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. மேலும் 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்தனை கட்டுப்பாடுகளைக் கடந்து வெளியாகியுள்ள பராசக்தி படம் மொழிப்போர் ஆய்வாளர் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’ புத்தகத்தைத் தழுவி புனைவுகளுடன் எடுக்கப்பட்டுள்ளது.
ரத்தமும் சதையுமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி படம் வெளியாகியுள்ள நிலையில், மின்னம்பலம் சார்பில் மொழிப்போர் ஆய்வாளர் பேராசிரியர் அ.இராமசாமி அவர்களிடம் பேசினோம். அவர் அளித்த விரிவான பேட்டி:
தமிழகத்தில் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொழிப் போராட்டம் நடந்து 60 ஆண்டுகளுக்குப் பின் பராசக்தி படம் வந்துள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் வரவேற்கிறேன். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்து 60 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூடத் தமிழ் மக்களுக்கு இந்தியை ஏற்றுக்கொண்டால் தமிழுக்கு ஆபத்து என்ற அந்த உணர்வு இன்று வரை இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை நான் வரவேற்கிறேன்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை இப்போது நினைவுபடுத்த வேண்டிய தேவை சமூகத்தில் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக இருக்கிறது. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பதுதான் நமது கொள்கை. இப்போது வரை நாம் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது நீட் தேர்வைக்கூட இந்தி படித்தால்தான் தேர்ச்சியடைய முடியும் என்பது போன்ற நிலை உள்ளது. இப்படி எதையெடுத்தாலும் இந்தியைத் திணிக்கிறார்கள். அதனால் இந்தக் காலகட்டத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது. அதைப் படக்குழுவினர் செய்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
பராசக்தி படத்திற்கும் உங்களுக்குமான தொடர்பு என்னவாக இருக்கிறது?
பராசக்தி படக்குழுவினர் என்னிடம் வந்து, “இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு” என்ற எனது புத்தகத்தின் அடிப்படையில் படம் எடுக்கிறோம், அனுமதி கொடுங்கள் என்று கேட்டனர். நானும் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கினேன். அவ்வப்போது சில சந்தேகங்களை என்னிடம் கேட்டனர். அதை நான் தெளிவுபடுத்தியதன் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. முறையாக என்னிடம் ஒப்புதல் பெற்று படத்தை வெளியிட்டார்கள். இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உள்ள முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருந்தது?
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் எனது பங்களிப்பு குறித்து “இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு” என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளேன். வாசகர்கள் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். போராட்ட காலத்தில் மதுரை கல்லூரி மாணவனாக இருந்த நான் தமிழ் மன்றத் தலைவராகவும் இருந்தேன். அதனால் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தலைமை தாங்கினேன். எனது தலைமையில் மாணவர்கள் மறியல், உண்ணாவிரதம் எனப் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தோம். 50 நாட்கள் நாங்கள் போராட்டம் நடத்திய நிலையில் காவலர்கள் ஏராளமான மாணவர்களைக் கைது செய்தனர்.
ஜனவரி 25-ல் இந்தித் திணிப்பை எதிர்த்து வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் சென்றபோது காங்கிரஸ்காரர்கள் ரௌடிகளை விட்டு எங்களை வெட்டச் சொன்னார்கள். அரிவாள், வேல் கம்பு கொண்டு தாக்கியதால் முதலில் நாங்கள் பயந்து ஓடினோம். பிறகு திரும்பித் தாக்க ஆரம்பித்தோம். அதன் விளைவுதான் 50 நாட்கள் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் இருவரைக் காணவில்லை என்பதால் நான் பச்சையப்பன் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தந்தி அனுப்பினேன். இதையடுத்து அங்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்படி இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர நானும் ஒரு காரணமாக இருந்தேன்.
பொள்ளாச்சி படுகொலை என்பது குறித்த உங்களது பார்வை?
எனது “இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு” நூலில் “பொள்ளாச்சி படுகொலை” என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் வரும். நான் பொள்ளாச்சி சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டியெடுத்தேன். காவலர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள் என்றும், பின்னர் ராணுவமும் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொன்னார்கள். பின்னர் உயிரிழந்தவர்களை ராணுவ முகாம்களில் வைத்து எரித்துவிட்டார்கள் என்றனர். பொள்ளாச்சி படுகொலை நடந்தபோது அங்கு சேர்மனாக இருந்த ராமசாமி என்பவர் “ஏராளமானோர் இறந்துவிட்டார்கள், அதை யாரும் வெளியே சொல்லவில்லை” என்றார். இப்படி இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது மிகப் பெரிய அளவில் பொள்ளாச்சியில் படுகொலைகள் நடந்தன.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் சொல்லப்படாத விஷயம் என்று உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
நாங்கள் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் முதலில் கோரிக்கை வைத்தோம். பிறகு தமிழை ஆட்சி மொழியாக வைக்க வேண்டும் என்றோம். ஆனால் அரசு எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டம் உடனடியாகத் தோல்வியடைந்தது என்று பழைய மாணவர் தலைவர்கள் எல்லோரும் நினைத்தோம். ஆனால் போராட்டம் ஒரு வகையில் வெற்றி. அரசாங்கம் 70 பேர் போராட்டத்தில் உயிரிழந்ததாகச் சொன்ன நிலையில், வரலாற்று ஆய்வாளர் ஒருவர் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக 1967 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. இந்தப் போராட்டம் நடந்ததால்தான் 1967-ல் ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்பட்டு ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு வரை ஆங்கிலம் நீடிப்பதற்குக் காரணம் 1965-ல் நாங்கள் நடத்திய போராட்டம்தான்.
நாங்கள் ஒருவேளை போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருந்திருக்கும். ஆங்கிலம் உள்ளிட்ட வேறு எந்த மொழியும் ஆட்சி மொழியாக இருந்திருக்க முடியாது. நம் இளைஞர்கள் ஆங்கிலத்தில் படித்ததன் விளைவாக நம் மாணவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம். இந்தப் போராட்டத்தையொட்டி அறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கைத் திட்டத்தால் இன்றும் ஆங்கிலம் நீடிக்கிறது. அதனால் இன்று அயல்நாடுகளில் வேலை பார்க்கும் நம்முடைய இளைஞர்கள், இளம் பெண்கள் யாருக்காவது நன்றி சொல்ல நினைத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், அண்ணாவிற்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.
பாஜக தலைவர்களில் ஒருவரான துணைப் பிரதமராக இருந்த அத்வானி லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது, “தமிழக மாணவர்கள் ஆங்கிலம் படித்ததால் அயல்நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் இந்தியை மட்டுமே படித்து இங்கேயே இருக்கிறீர்கள். ஆங்கிலம் படியுங்கள்” என்றார். இதை நான் சொல்லவில்லை.. அத்வானியே சொன்னார்.
மத்திய அரசு இப்போதும் இந்தியைத் திணிப்பதாகக் கூறப்பட்டாலும், சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகம் உள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அதே வீரியத்தோடு நடக்க சாத்தியம் உள்ளது என நினைக்கிறீர்களா?
டெக்னாலஜி வளர்ந்து விட்டதால் மொழி ஒரு பிரச்சினையாகவே வராது. அப்போது அரிவாள் வெட்டு உள்ளிட்ட அடக்குமுறை இருந்தது. இப்போது அந்த அளவுக்கு அடக்குமுறை இல்லை. அதனால் அந்த அளவுக்கு போராட்டம் இல்லை என்பதால் மொழி உணர்வு இல்லை என்று அர்த்தம் இல்லை. போராட்டத்தின் வடிவம் மாறியுள்ளது அவ்வளவுதான்.
அன்று கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பே இல்லை. இன்று அங்கும் கூட எதிர்ப்பு வந்துள்ளது. அதனால் எல்லா மக்களும் இந்தித் திணிப்பை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உங்கள் வாழ்நாளில் காலத்தில் கலைப்படைப்பாக வரும் என்று எதிர்பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்தேன். நான் இது போன்ற திரை வடிவில் கொண்டு வர வேண்டும் என்று 28 ஆண்டுகளாக முயற்சி செய்தேன். பராசக்தி படக்குழுவினர் அணுகியபோது மகிழ்ச்சியாக ஒப்புதல் அளித்தேன். இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வு கொழுந்து விட்டு எரியத்தக்க வகையில் படம் ஆழமாக எடுக்கப்பட்டு நல்ல முறையில் எடுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எதுவரை நீடிக்கும்.. அதன் இலக்கு என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மத்திய அரசில் தமிழ் ஆட்சி மொழியாக மாறும் வரை இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இருக்க வேண்டும். டெல்லியில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்கள் இந்தியில் செயல்படலாம். ஆனால் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படலாம். தேவைக்கு ஏற்ப ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த இலக்கை அடையும் வரை நமது போராட்டம் தொடரும்.
பராசக்தி படம் வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கண்டிப்பாக பராசக்தி படத்தின் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும். இந்தப் படத்தை மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக வந்து பார்க்கிறார்கள். அந்த எழுச்சி தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும்.
திமுகவின் தேர்தல் அரசியலுக்கு பராசக்தி படத்தின் தாக்கம் பயன்படுமா?
திமுகவிற்கான பயன் என்று பார்ப்பதை விட தமிழ் மொழிக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட பயன்படும்.
“தீ பரவட்டும்.. அண்ணாதுரைதான் ஆள்கிறான்” என்ற வசன மாற்றங்கள்.. படத்தில் 52 இடங்களில் மியூட் போன்ற தணிக்கை வாரியத்தின் நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது அப்பட்டமான அடக்குமுறைதான். மத்திய அரசு தணிக்கை வாரியத்தின் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. நான் எழுதிக் கொடுத்த பல வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதை கடுமையாகக் கண்டிக்கிறோம்.
ஆனால் படம் வெளியில் வர வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சில மாற்றங்களைச் செய்து படத்தை வெளியிட்டுவிட்டார்கள். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இளைஞர்கள் மத்தியில் வேறு விதமான வரவேற்பைப் பெற்றுவிட்டது.
தணிக்கை வாரியத்தின் அடக்குமுறையே படத்திற்கான விளம்பரமாக மாறிவிட்டது. இத்தனை மாற்றங்கள் செய்து வெளிவந்துள்ள படமே போதுமான எழுச்சியைத் தரப்போகிறது.
இந்தித் திணிப்புப் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் தமிழ்ச் சமூகம் எந்த மாதிரி இருந்திருக்கும்?
இந்தப் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வந்திருக்கும். ஆங்கிலம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கும். நாம் எல்லோரும் இந்தி பேசிக்கொண்டிருப்போம். இன்று கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் படித்த மாணவர்கள் பலர் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட ஆங்கிலம் இல்லாமல் இந்தி படித்திருந்தால் அடிமை வாழ்வு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம்.
தமிழகத்தின் முன்னேற்றங்கள் எல்லா வகையிலும் தடுக்கப்பட்டிருக்கும். சரியான நேரத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றதும் தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.
இந்தி எதிர்ப்பு போராடியதால்தான் எங்கள் வாய்ப்புகள் பறிபோனதாக ஒரு தரப்பினர் விமர்சனம் வைப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை. விமர்சனம் வைப்பவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்க வேண்டாம் என்று யார் சொன்னது? இருமொழிக் கல்வியைச் சட்டமாக்கிய அறிஞர் அண்ணாவே இந்தி படித்தார். அதனால் இந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.
இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி படித்து உத்தரபிரதேசம், பீகார் சென்று வேலை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம். அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால்தானே தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள். இந்தச் சூழலில் நாம் கட்டாயமாக இந்தி படித்து என்ன செய்வது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி நிறையப் புத்தகங்களை படிக்க வேண்டும். அறிவை விரிவாக்க வேண்டும். தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும் என்பதே எனது அளப்பரிய ஆசை.. அதுவே எனது கோரிக்கையும் கூட.
