போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரைத்துறையில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. producer krajan request to modi for srikanth
இந்த நிலையில் மகேஸ்வரன் மகிமை படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் ஸ்ரீகாந்த் கைது குறித்து மன வேதனையுடன் மனம் திறந்து பேசினார்.

அவர் பேசுகையில், “மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு இசைவெளியீட்டு விழா. அதில் பங்கேற்ற அழகான நடிகர், என் தம்பி மாதிரி இருந்தவர் இன்று கைதாகி ஜெயிலில் இருக்கிறார்.
ஏற்கெனவே குடும்பத்தால் கோர்ட், கேஸ் என்று அவர் ரொம்ப அவதிப்பட்டார். அதன்பிறகு படம் இல்லாமல் போய்விட்டது. பின்னர் சொந்தமாக படம் எடுத்தார். அதை கடன் வாங்கி ரிலீஸ் செய்தார். இப்படி எங்க போனாலும் பிரச்சனை. அதனால் மதுவுக்கு அடிமையாகி விட்டார்.
மது பிரச்சனையை ஒழித்திடுமா? மதுவால் உடல் குடும்பம், நிம்மதி எல்லாம் அழியும். இன்னைக்கு காந்தி பிறந்த மண் என்பதால் குஜராத்தில் மதுவிலக்கு உள்ளது. ஆனால் அங்குள்ள துறைமுகத்திற்கு வந்துதான், போதைப் பொருள் இந்தியா முழுக்க கடத்தப்படுகிறதாம்.
போதைப் பொருள் வளர சினிமாவும் ஒரு காரணம். கடந்த ஒரு வருஷத்துல ரஜினி, விஜய், அஜித் நடித்த எல்லா படத்திலும் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளது. இவங்களுக்கு எல்லாம் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க. ஏன் இவங்க எல்லாம் நல்ல குடும்ப கதையில் நடிக்க முடியாதா?
பல குழந்தைகளுக்கு நான் தாத்தா என்ற முறையில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டி முதல்வர் ஸ்டாலினிடம் இந்த இடத்தில் கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்வருக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் இங்க மூடிவிட்டால், பாண்டிச்சேரி, ஓசூர் தாண்டி பெங்களூரு, கேரளா என தமிழக எல்லைத் தாண்டி மது வாங்குவார்கள்.
இந்த நேரத்தில் காந்தி பிறந்த அதே மண்ணில் பிறந்தவர் என்ற முறையில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கிறேன்” என கே.ராஜன் பேசினார்.