பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25% வரியை முதலில் விதித்தார் டொனால்ட் டிரம்ப். ஆனாலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் தொடர்ந்து வாங்கியதால் கூடுதலாக 25% வரி விதிப்பதாக அறிவித்தார் டிரம்ப். இதனால் நாட்டின் ஜவுளித் துறை உள்ளிட்டவை கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.
அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை மறைமுகமாக இந்தியா ஆதரிக்கிறது என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 23-ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.
பிரதமர் மோடி தமது அமெரிக்கா பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசக் கூடும் என கூறப்படுகிறது. அப்போது, இருதரப்பு உறவுகள், இந்தியா மீதான 50% வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.