ADVERTISEMENT

பிரதமர் மோடிக்கு அழுத்தம்… பயந்து போயிருக்கிறார்… ஏன் தெரியுமா?: ராகுல் காந்தி பேட்டி!

Published On:

| By Kavi

வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் பிரதமர் மோடி அடிபணிந்துவிட்டார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 

மக்களவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய சீன விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால் அவர் சீனா என்று வாயை திறந்தாலே பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 3) டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,  இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது பற்றி கடுமையாக விமர்சித்தார். 

இதுகுறித்து அவர்,  “பிரதமர் மோடி நிலைதடுமாறிப் போயிருக்கிறார். கடந்த நான்கு மாதங்களாக அந்த வர்த்தக ஒப்பந்தம் முடங்கி போய் கிடந்தது.  அதற்கான காரணம் எனக்கும் தெரியும். பிரதமர் மோடிக்கும் தெரியும். ஆனால், நேற்று மாலை நரேந்திர மோடி திடீரென அதில் கையெழுத்திட்டுள்ளார்.  அவர் மீது கடும் அழுத்தம் உள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம்  இப்போது உடையக்கூடும். நமது பிரதமர் சமரசம் செய்யப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

யார் அதை செய்தார்கள், எப்படி செய்தார்கள் என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காதது குறித்து பேசிய ராகுல் காந்தி, “ வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்னை வெளியே சென்று பேசச் சொல்லலாம்… அது தானாகவே நடக்கும்.

ADVERTISEMENT

ஆனால் இந்திய விவசாயிகள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தில், நரேந்திர மோடி உங்கள் கடின உழைப்பையும், உங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் விற்றுவிட்டார். இது சமரசம் செய்யப்பட்டிருப்பதாலேயே, அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  

அவர் உங்களை மட்டும் விற்கவில்லை; இந்த நாட்டையே விற்றுவிட்டார். அதனால் தான் என்னை நாடாளுமன்றத்தில் பேச விடுவதில்லை. 

பிரதமர் மோடி இப்போது பயந்துபோயிருக்கிறார். ஏனென்றால் யாரெல்லாம் அவருடைய பிம்பத்தை உருவாக்கினார்களோ, அவர்களே இப்போது அதை சிதைக்கத் தொடங்கியுள்ளனர். 

அமெரிக்காவில் அதானிக்கு எதிராக 1,111 வழக்குகள் உள்ளன. அவர்கள் அதானியை மட்டும் குறிவைக்கவில்லை. மோடியின் நிதி கட்டமைப்பையே குறிவைக்கிறார்கள். இதுதான் அந்த அழுத்தத்துக்கான முதல் முக்கிய புள்ளி” என்றார். 

இதற்கிடையே,  அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்து. 

இதுதொடர்பாக பேசிய ராகுல் காந்தி,  “எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் பல தகவல்கள் உள்ளன. அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது, ஆனால் அமெரிக்கா அவற்றை இன்னும் வெளியிடவில்லை. இதுதான் இரண்டாவது அழுத்த புள்ளி. 

அடுத்ததாக அதானிக்கு எதிரான வழக்கு என்றால், அது உண்மையில் மோடிக்கு எதிரான வழக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதானிதான் பாஜகவின் நிதி கட்டமைப்பு, மோடியின் நிதி கட்டமைப்பு. இதனால் தான் மோடிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி மீது சுமத்தியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share