உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளை (President’s 14 Questions) திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில், மாநில சட்டமன்றங்களின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயம் செய்தது உச்சநீதிமன்றம்.

இந்த தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜனாதிபதியின் 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே பதில் உள்ளது. இதனை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டியது இல்லை; ஜனாதிபதிக்கே கேள்விகளை திருப்பி அனுப்பலாம். மத்திய அரசும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த தீர்ப்பை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால் ஜனாதிபதியின் கேள்விகள் மீது விசாரணை நடத்த தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.